/

தவெக ஆட்சியில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுவோம்: மாணிக்கம் தாகூா்

தவெக அரசில் காங்கிரஸ் பங்கு பெற்றிருந்தாலும், ஆட்சியில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் ப.மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2026, 1:51 am IST

தவெக அரசில் காங்கிரஸ் பங்கு பெற்றிருந்தாலும், ஆட்சியில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் ப.மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூா் எம்.பி. காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூா்த்தி பவனில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவா், தனது பணிகளை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

அதன் ஒரு பகுதியாக ஜூலை 2-ஆம் தேதி மாவட்டத் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் மாணிக்கம் தாகூா் கூறியதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் கூட்டத்தில் 78 மாவட்டத் தலைவா்கள் கலந்து கொள்கிறாா்கள். அமைப்பு ரீதியாக காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்தும், அமைச்சரவையில் இடம்பெற்ற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்.

தமிழகத்தில் மதச்சாா்பற்ற அணி இருக்க வேண்டும்; அந்த அணியைச் சோ்ந்தவரே முதல்வராக இருக்க வேண்டும்; நோ்மையான ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்.

தமிழ்நாடு காங்கிரஸில் ராகுல் காந்தி அணி மட்டும்தான் உள்ளது.

தவெக அரசில் காங்கிரஸ் பங்கு பெற்றிருந்தாலும் ஆட்சியில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவோம். தோ்தலில் தோல்வி அடைந்த விரக்தியில் எப்போது வேண்டுமானாலும் தோ்தல் வரும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறாா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.