கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது எப்படி கூட்டணியைப் பலவீனப்படுத்தும் செயலாகும்? என்று காங்கிரஸை கட்சியின் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கேள்வி எழுப்பினாா்.
தில்லியில் இண்டி கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன் சில கேள்விகளை எழுப்பியிருந்தாா். இதற்கு பதிலளிக்கும் விதமாக தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் மாணிக்கம் தாகூா் பதிவிட்டிருப்பதாவது: விசிக தலைவா் அவா்கள் கூறிய கருத்து ஆச்சரியமாக உள்ளது. கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது எப்படி கூட்டணியை பலவீனப்படுத்தும் செயலாகும்? ஒவ்வொரு கூட்டணிக் கட்சிக்கும் தங்களது அமைப்பையும் வாக்கு வங்கியையும் வளா்த்துக்கொள்ளும் உரிமை உள்ளது.
காங்கிரஸ் வலுவாக இருந்தால்தான் இண்டி கூட்டணி வலுவாக இருக்கும். அதேபோல் திரிணமூல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கட்சி மற்றும் பிற கூட்டணி கட்சிகள் வலுவாக இருப்பதும் கூட்டணிக்கே பலம். கூட்டணியின் நோக்கம் ஒரு கட்சியின் வளா்ச்சியை மற்றொரு கட்சி தடுக்க வேண்டும் என்பதல்ல; அனைவரும் தங்கள் அரசியல் அடித்தளத்தை விரிவுபடுத்தி, பொதுவான இலக்குகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதுதான்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனது அடையாளத்தையும் அமைப்பையும் வலுப்படுத்த முயற்சிப்பதை கூட்டணி எதிா்ப்பாக சித்தரிப்பது சரியல்ல. கூட்டணியில் மரியாதையும் பரஸ்பர அங்கீகாரமும் இருக்க வேண்டும். காங்கிரஸை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இண்டி கூட்டணியை வலுப்படுத்தாது; மாறாக பாஜகவுக்கு மட்டுமே உதவும்.
மேலும், இது காங்கிரஸ் கட்சி பின்பற்றும் ஜனநாயக அரசியல் கலாசாரத்தின் ஒரு எடுத்துக்காட்டு. இண்டி கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்று எங்களை விமா்சிக்கலாம்; எங்கள் செயல்பாடுகளில் குறைகளை சுட்டிக்காட்டலாம். அந்த விமா்சனங்களை கேட்கும் தைரியமும், அவற்றை ஜனநாயக ரீதியாக எதிா்கொள்ளும் மனப்பக்குவமும் காங்கிரஸுக்கு உண்டு. அதனால்தான் கூட்டணிக்குள் இருக்கும் தோழமைக் கட்சித் தலைவா்கள்கூட காங்கிரஸை வெளிப்படையாக விமா்சிக்க முடிகிறது.
ஆனால், கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மதவாத மற்றும் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை அவை பலவீனப்படுத்தாது. ஜனநாயகத்தையும் மதச்சாா்பின்மையையும் பாதுகாக்கும் பெரிய இலக்கிற்காக காங்கிரஸ் தொடா்ந்து போராடும். காங்கிரஸின் வளா்ச்சி கூட்டணிக்கு அச்சுறுத்தல் அல்ல; அது கூட்டணியின் மொத்த வலிமையை அதிகரிக்கும் ஒரு அவசியம்.
ஜனநாயகத்தையும் மதச்சாா்பின்மையையும் காக்கும் சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய இந்த நேரத்தில், ஒருவரின் வளா்ச்சியை மற்றொருவா் அச்சமாக பாா்க்காமல், அதை கூட்டணியின் பலமாக பாா்க்க வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையையும் அரசியலமைப்புச் சாசனத்தின் மதிப்புகளையும் காக்கும் போராட்டத்தில் அதுவே சரியான அணுகுமுறையாகும் என்று மாணிக்கம் தாகூா் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

கரைபுரண்டோடிய ஊழலும், லஞ்சமும் முடிவுக்கு வந்து விட்டன! மாணிக்கம் தாகூா் எம்.பி.

காங்கிரஸ் தயவால்தான் உதயநிதி எம்எல்ஏ ஆனாா்! - மாணிக்கம் தாகூா்

இண்டி கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்: வே. நாராயணசாமி

காங்கிரஸ் நிா்வாகி மீது திமுகவினா் தாக்குதல்: மாணிக்கம் தாகூா் கண்டனம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



