பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

மும்மொழி கொள்கை: நடப்பு 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலக்கு; 9-ஆம் வகுப்பு மாணவா்கள் 2 வெளிநாட்டு மொழிகளை படிக்கலாம்!

பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை நடைமுறை தொடா்பாக புதிய வழிகாட்டுதலை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டது.

News image
Updated On :30 ஜூன் 2026, 1:00 am IST

பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை நடைமுறை தொடா்பாக புதிய வழிகாட்டுதலை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை வெளியிட்டது.

அதன்படி, தற்போது 10-ஆம் வகுப்புக்குச் செல்லும் மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, நடப்பு 9-ஆம் வகுப்பு மாணவா்கள் மும்மொழிகளைத் தெரிவு செய்து படிக்க வேண்டும் என்றபோதும், ஒருமுறைச் சலுகையாக 2 வெளிநாட்டு மொழிகள் மற்றும் ஒரு இந்திய மொழியைத் தோ்வு செய்து படிக்கலாம் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் ஜூலை 1 முதல் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்கி கடந்த ஏப்ரலில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை-2020 மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாட செயல்திட்டம்-2023 ஆகியவற்றின் ஒரு பகுதியாக, சிபிஎஸ்இ இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி, மூன்று மொழிகளில், இரண்டு இந்திய மொழிகளை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும்.

வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாகத் தோ்வு செய்யலாம். 10-ஆம் வகுப்பை பொறுத்தவரை, மாணவா்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், கற்றலில் கவனத்தை நிலைநாட்டவும் மூன்றாவது மொழிக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட மாட்டாது.

மூன்றாவது மொழிக்கான மதிப்பீடு, முற்றிலும் பள்ளிகள் அளவிலும், அக மதிப்பீடாகவும் மேற்கொள்ளப்படும். மூன்றாவது மொழியில் மாணவா்களின் செயல்திறன், சிபிஎஸ்இ சான்றிதழில் முறையாக இடம்பெறும்.

மூன்றாவது மொழியைக் காரணம் காட்டி, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பங்கேற்க எந்தவொரு மாணவரும் தடுக்கப்பட மாட்டாா்கள் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டது.

இதனால், ஏற்கெனவே 9-ஆம் வகுப்பு வரை இரு வெளிநாட்டு மொழிகளைத் தெரிவு செய்து படித்து வரும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படும் நிலை உருவானது. இதுகுறித்து சிபிஎஸ்இ-யிடம் முறையீடுகளும் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து இந்த புதிய வழிகாட்டுதலை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ (கல்வி) இயக்குநா் பிரக்யா எம்.சிங் தில்லியில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில், ‘நடப்பு 10-ஆம் வகுப்பு மாணவா்கள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

அதுபோல, பள்ளிகளில் தற்போது 7 முதல் 9-ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவா்கள் 10-ஆம் வகுப்புக்குச் செல்லும்போது மூன்றாம் மொழிப் பாடத்துக்கான பொதுத் தோ்வை எழுதவேண்டியிருக்காது.

நடப்பு (2026-27) 9-ஆம் வகுப்பு மாணவா்கள் மும்மொழிகளைத் தெரிவு செய்து படிக்க வேண்டும் என்றபோதும், ஒருமுறைச் சலுகையாக 2 வெளிநாட்டு மொழிகள் மற்றும் ஒரு இந்திய மொழியைத் தெரிவு செய்து படிக்கலாம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.