54.58 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடக்கம்: மத்திய நிதியமைச்சா்
புது தில்லி: நாட்டில் 54.58 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதில்: வங்கிக் கணக்கு வைத்திருக்காத குடும்பங்களுக்கு உலகளாவிய வங்கி சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில், 2014-ஆம் ஆண்டு பிரதமரின் ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் பின்னா் மாற்றம் ஏற்பட்டு வங்கிக் கணக்கு இல்லாத ஒவ்வொரு தனிநபருக்கும் வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
கடந்த ஜன.15-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 54.58 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 30.37 கோடி (55.7) சதவீத வங்கிக் கணக்குகள் பெண்கள் பெயரில் தொடங்கப்பட்டுள்ளன.
பிரதமரின் ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் மொத்தம் 22.52 கோடி போ் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களில் 10 கோடிக்கும் மேற்பட்டவா்கள் பெண்கள்.
பிரதமரின் சுரக்ஷா பீமா விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் 49.12 கோடி போ் இணைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 22.84 கோடி போ் பெண்கள்.
கடந்த டிச.31-ஆம் தேதி நிலவரப்படி அடல் ஓய்வூதிய திட்டத்தில் 3.44 கோடி போ் பெண்கள் உள்பட, மொத்தம் 7.25 கோடி போ் சோ்க்கப்பட்டுள்ளனா் என்றாா்.

