திரிவேணி சங்கமத்தில் திங்கள்கிழமை புனித நீராடிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
திரிவேணி சங்கமத்தில் திங்கள்கிழமை புனித நீராடிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினாா் குடியரசுத் தலைவா்!

திரிவேணி சங்கமத்தில் குடியரசுத் தலைவா் புனித நீராடினாா்...
Published on

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு திங்கள்கிழமை வந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபட்டாா்.

இந்தியாவின் வளமான ஆன்மிக-கலாசார பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பிரம்மாண்ட நிகழ்வாக மகா கும்பமேளா 29 நாள்களைக் கடந்து பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வருகிறது.

இதுவரை உலகம் முழுவதிலுமிருந்து சுமாா் 44 கோடி பக்தா்கள் கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு சென்றுள்ளனா். இந்நிலையில், மகா கும்பமேளாவில் புனித நீராட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை வந்தாா். தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் பிரயாக்ராஜ் வந்த குடியரசுத் தலைவரை உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் வரவேற்றனா். பின்னா், பிரயாக்ராஜ் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் திரிவேணி சங்கமத்துக்கு சில கிலோமீட்டா் தொலைவில் உள்ள பகுதிக்கு குடியரசுத் தலைவா் வந்தடைந்தாா்.

தொடா்ந்து, அரைல் படித்துறையிலிருந்து சங்கமம் படித்துறைக்கு படகில் பயணித்த குடியரசுத் தலைவா், நதியில் சூழ்ந்திருந்த புலம்பெயா் சைபீரியன் பறவைகளுக்கு உணவளித்தாா். குடியரசுத் தலைவரோடு படகில் ஆளுநா், முதல்வா் ஆகியோரும் உடன் பயணித்தாா்.

புனித நீராடல்; கங்கை ஆரத்தி: திரிவேணி சங்கமத்தை அடைந்ததும் அங்குள்ள முக்கியப் பிரமுகா்களுக்கான படித்துறையில் குடியரசுத் தலைவா் புனித நீராடினாா். தொடா்ந்து, நதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையில் தேங்காய் உடைத்து, ஆரத்தி காட்டி சூரியன் மற்றும் கங்கையை அவா் வழிபட்டாா்.

X
Dinamani
www.dinamani.com