
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பாஜக அரசை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்” நமது பொருளாதாரம் நல்ல வருவாயை அளிப்பதாக மோடி அரசின் நிதியமைச்சர் கூறுவதை விட பெரிய முரண்பாடு வேறெதுவும் இருக்க முடியாது.
2025 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை இந்திய பங்குச் சந்தைகளில் ரூ. 45 லட்சம் கோடி அழிக்கப்பட்டுள்ளது. நிஃப்டி 50 நிறுவனங்களின் காலாண்டு லாப வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் தற்போது மிகவும் மோசமாகியுள்ளன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரூ. 1.56 லட்சம் கோடிக்கும் அதிகமான பங்குகளை விற்றுள்ளனர். விற்கப்பட்ட பங்குகளில் கிட்டத்தட்ட ₹1 லட்சம் கோடி பங்குகள் 2025-ல் விற்கப்பட்டவை. இது சிறு, நடுத்தர முதலீட்டாளர்களின் செல்வத்தை அழிக்க வழிவகுத்துள்ளது.
ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 87 -க்கு வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு 43% குறைந்துள்ளது. இதனால், வர்த்தக பற்றாக்குறை வானளவில் உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் இறக்குமதிகள் 62.21% அதிகரித்துள்ளன.
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு ரூ. 10 லட்சம் கோடி கார்ப்பரேட் வரி வருவாயை விட்டுக்கொடுத்துள்ளது. ஆனால், கார்ப்பரேட் வரி குறைப்பால் பயனடைந்த 9 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளைக் குறைத்துள்ளன.
நமது உற்பத்தித் துறை மூழ்கிக் கொண்டிருக்கிறது. மேக் இன் இந்தியா & பிஎல்ஐ திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன.
தொலைநோக்குப் பார்வையற்ற, கொள்கையற்ற மோடி அரசு இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றது” என மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.