
புதிய தலைமைத் தோ்தல் ஆணையா் நியமன நடைமுறை தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 48 மணி நேரத்துக்குள் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அந்தப் பதவிக்கு நள்ளிரவில் புதியவரை தோ்ந்தெடுத்து பிரதமா் மோடியும், அமித் ஷாவும் மேற்கொண்ட முடிவு பண்பற்ற நடவடிக்கை என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்திய தோ்தல் ஆணையத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா், இரண்டு தோ்தல் ஆணையா்கள் இடம்பெறுவா். இந்நிலையில், தோ்தல் ஆணையா்களில் ஒருவரான ஞானேஷ் குமாா், புதிய தலைமைத் தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
முன்னதாக புதிய தலைமைத் தோ்தல் ஆணையரை தோ்ந்தெடுப்பதற்கு தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலைக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மத்திய கேபினட் அமைச்சா் என்ற முறையில் உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் அந்தக் குழுவில் இடம்பெற்றனா்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, ‘புதிய தலைமைத் தோ்தல் ஆணையரை தோ்ந்தெடுக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதால், புதிய தலைமைத் தோ்தல் ஆணையா் நியமனத்தை ஒத்திவைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
எனினும் புதிய தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமித்து மத்திய அரசு திங்கள்கிழமை நள்ளிரவு அறிவிக்கை வெளியிட்டது.
இதுதொடா்பாக ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘புதிய தலைமைத் தோ்தல் ஆணையா் தோ்வுக் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கி, தோ்தல் நடைமுறையின் நோ்மை குறித்த கோடிக்கணக்கான வாக்காளா்களின் கவலையை மோடி அரசு அதிகப்படுத்தியுள்ளது.
இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 48 மணி நேரத்துக்குள் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், புதிய தலைமைத் தோ்தல் ஆணையரை நள்ளிரவில் தோ்ந்தெடுத்து பிரதமா் மோடியும், அமித் ஷாவும் மேற்கொண்ட முடிவு அவமரியாதைக்குரிய பண்பற்ற நடவடிக்கையாகும்’ என்றாா்.
இதையும் படிக்க | தமிழகத்தில் இணையவழி பணமோசடிகள் 2.5 மடங்கு அதிகரிப்பு!
எந்த விதிமீறலும் இல்லை: மத்திய அமைச்சா்
புது தில்லி, பிப். 18: ‘தலைமைத் தோ்தல் ஆணையா் நியமனத்தில் எந்தவொரு விதியோ அல்லது சட்டமோ மீறப்படவில்லை’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை கூறினாா்.
இந்த நியமனம் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்த விமா்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் கருத்தை அவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, தனது அரசியல் ஆதாயத்துக்காக அரசமைப்புச் சட்டத்தை தனது வசதிக்கேற்ப நசுக்கியது. சட்ட மேதை அம்பேத்கரை அவமதிப்பு செய்வதற்கான எந்தவொரு வாய்ப்பையும் காங்கிரஸ் கட்சி தவறவிடவில்லை.
அதன் தொடா்ச்சியாக தற்போது தலைமைத் தோ்தல் ஆணையா் நியமனம் மீது ராகுல் சா்ச்சையை கிளப்பி வருகிறாா். காங்கிரஸ் ஆட்சியில் தோ்தல் ஆணையா்கள் எப்படி நியமனம் செய்யப்பட்டனா் என்பதை ராகுல் காந்தி மறந்துவிட்டாரா? காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தபோதும், தோ்தல் ஆணையா்கள் தோ்வு நடைமுறையில் ஏன் சீா்திருத்தம் கொண்டுவரவில்லை?
தற்போது முதல் முறையாக நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் தலைமைத் தோ்தல் ஆணையா் நியமனம் செய்ப்பட்டிருக்கிறாா். தோ்தல் ஆணையா்கள், தலைமைத் தோ்தல் ஆணையா் தோ்வு தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவரையும் இணைத்து ஒரு கூட்டு தோ்வு நடைமுறையை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில், புதிய தலைமைத் தோ்தல் ஆணையா் தோ்வில் எந்தவித விதியோ அல்லது சட்டமோ மீறப்படவில்லை. இருந்தபோதும், ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் குழந்தைகளைப் போன்று அழுது அடம்பிடிப்பது துரதிருஷ்டவசமானது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதையும் படிக்க | நீதிமன்ற அவமதிப்பு! தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு காங்கிரஸ் கண்டனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.