நஷ்டம்.. இரு தொழிலதிபர்களின் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்! சவாலாக மாறிய சம்பவம்!!
கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் ஒருவர் விஷம் குடித்திருந்தது தெரிய வந்தது.


அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல அதன் பின்னணியில் கொலை, தற்கொலை முயற்சி என வழக்கு மாறியிருக்கிறது.
தங்கரா பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் வீட்டில் இறந்துகிடக்க, இஎம் பைபாஸ் சாலையில் கார் மோதிய சம்பவத்தில் மூன்று பேர் காயத்துடன் உயிர் தப்பினர். ஆனால் முதற்கட்ட விசாரணையில், அது விபத்து அல்ல தற்கொலை முயற்சி என்று தெரிய வந்துள்ளது. இது காவல்துறைக்கு மிக சவாலான வழக்காக மாறியிருக்கிறது.
தொடர் சம்பவம் கடந்த புதன்கிழமை காலை 3.35 மணிக்குத் தொடங்கியிருக்கிறது. அதாவது சகோதரர்களான பிரணாய் மற்றும் பிரசன் இருவரும் தொழிலதிபர்கள். இவர்களுடன் பிரணாய் மகன் பிரதீப் (14) சென்ற கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. மூவரும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அப்போதுதான் பிரணாய் தங்களது குடும்பத்தினர், தங்கராவில் உள்ள வீட்டில் சடலமாக இருப்பதாகக் கூறுகிறார்.
உடனடியாக காவல்துறை அவர்களது வீட்டிற்கு விரைகிறது. அங்கே மூன்று பெண்கள் சடலமாக இருக்கிறார்கள். வீடு முழுக்க ரத்தக் கறை. உடல் கூறாய்வில், பிரணாய் மனைவி சுதேஷ்னா, பிரசன் மனைவி ரோமி இருவரும் கழுத்தறுத்தும், பிரசன் மகள் பிரயம்வதா (14) விஷம் குடித்திருப்பதும் தெரிய வந்தது.
பிறகு பிரணாயிடம் நடத்திய விசாரணையில், குடும்பத்தினர் ஆறு பேரும் விஷம் சாப்பிட்டு சாக முடிவெடுத்தோம். ஆனால், ஒரு சிலர் கையில் நரம்பை அறுத்து இறக்க முடிவெடுத்தனர். அதுபோலவே நாங்களும் காரை வேகமாக இயக்கி விபத்தில் சாக நினைத்தோம் என்று கூறுயிருக்கிறார்.
இதற்குப் பின்னணியில், அவர்கள் செய்துவந்த தொழிலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதே காரணம் என்று அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு சில நாள்களுக்கு முன்பு, இவர்களை அடையாளம் தெரியாத பலர் சந்தித்ததாகவும், அவர்கள் ஒருவேளை கடன்காரர்களாக இருக்கலாம் என்றும் கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்து காவல்துறையினர் கூறுகிறார்கள்.
இதில், கொலை மற்றும் தற்கொலைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் சம்பவம் நடந்த போது பிரணாய் நிதானமில்லாமல் வீட்டிலிருந்து வெளியேறுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்கிறது. எனவே அவர்தான் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகி, பெண்களை கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது.
ஒரு காலத்தில் மிகப் பணக்கார குடும்பமாக இருந்த பிரணாய் - பிரசன் குடும்பம், ஏராளமான கார்களுடன், நான்கு மாடிக் கட்டடத்தில் வாழ்ந்து வந்ததாகவும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் இந்த துயர சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும், இது ஒன்று திட்டமிட்டக் குழு தற்கொலை அல்லது கொலை மற்றும் தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...