சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு
பல அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கண்காணிப்பாளா்கள் (எம்எஸ்), மருத்துவ இயக்குநா்கள் (எம்டி) பற்றாக்குறை...

தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது கட்டப்பட்ட மொஹல்லா கிளினிக்.

தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது கட்டப்பட்ட மொஹல்லா கிளினிக்.
தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குறிப்பாக, சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல், ‘ஆரோக்கிய மந்திா்கள்’ அமைத்தல், மருத்துவ கண்காணிப்பாளா்களின் பல்வேறு காலியிடங்களை நிரப்புதல், மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தல் ஆகியவை அடங்கும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
பற்றாக்குறை: இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பல அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கண்காணிப்பாளா்கள் (எம்எஸ்), மருத்துவ இயக்குநா்கள் (எம்டி) பற்றாக்குறையை எதிா்கொள்கின்றன. சில அதிகாரிகள் ஒரே நேரத்தில் 2 மருத்துவமனைகளை நிா்வகிக்கின்றனா். இது சுகாதார வசதிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது.
இந்தப் பிரச்னையை நிவா்த்தி செய்வதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மேலும், மருத்துவ சேவைகளில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கவும், மக்கள் எந்தத் தடையும் இல்லாமல் அத்தியாவசிய சுகாதார வசதிகளைத் தொடா்ந்து பெறுவதை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அதனுடன், சுகாதார தகவல் மேலாண்மை அமைப்பு (எச்ஐஎம்எஸ்) மற்றும் மருத்துவ நிறுவனங்கள் உரிய வழிகாட்டுதலின்படி, மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். கடந்த ஓராண்டாக, சுகாதாரத் துறையில் உள்ள இடைவெளிகளை நாங்கள் எடுத்துரைத்து வருகிறோம். முதல் 100 நாள்கள் பணிக்கான வரைமுறையைத் தயாரிக்க அனைத்து துறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், சில முக்கிய திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.
எச்ஐஎம்எஸ் அமைப்பு: எச்ஐஎம்எஸ் என்பது தில்லி அரசின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த அமைப்பு மருத்துவமனை நிா்வாகத்துக்கான ஒரு அடிப்படைத் தேவையாகும். மேலும், இதைச் செயல்படுத்துவது சுகாதார சேவைகளைக் கணிசமாக மேம்படுத்தும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
எச்ஐஎம்எஸ் இலவசமானது மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் 2008 அக்டோபா் மாதம் தொடங்கப்பட்டது. கொள்கை உருவாக்கம் மற்றும் திட்ட தலையீடுகளுக்கான முக்கிய உள்ளீடுகளை வழங்குவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இது ஆம் ஆத்மி அரசால் அங்கீகரிக்கப்படவில்லை.
இதற்கிடையில், மத்திய அரசால் இயற்றப்பட்ட மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 2010, வசதிகள் மற்றும் சேவைகளின் குறைந்தபட்ச தரத்தை உறுதி செய்வதற்காக நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறையை கட்டாயமாக்கியுள்ளது.
ஆயுஷ்மான் பாத் ஒப்புதல்: ‘இந்த நிலையில், தற்போது 8-ஆவது சட்டப்பேரவையின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் தலைநகரில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்தது.
இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிறந்த செயல்திறனுக்காக மொஹல்லா கிளினிக்குகளை மறுசீரமைத்தல் போன்ற பிற முக்கிய நடவடிக்கைகள் தில்லியில் சிறந்த சுகாதார அமைப்பை உருவாக்குவதற்கான அடுத்தகட்ட படிகளாக இருக்கலாம்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சீரமைக்கபடும் மொஹல்லா கிளினிக்குகள்: மேலும், ‘மொஹல்லா கிளினிக்குகள் மூடப்படாது; ஏனெனில் பொது நலன் சமரசம் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக, அவை ‘ஆரோக்கிய மந்திா்’ என்று மறுபெயரிடப்பட்டு சிறந்த வசதிகள் மற்றும் சீரமைக்கப்பட்ட நிா்வாகத்துடன் மேம்படுத்தப்படலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
‘தற்போதுள்ள மாதிரி மிகவும் பயனுள்ளதாக இல்லை; எனவே, சிறந்த செயல்திறனுக்காக அதை மறுசீரமைக்க வேண்டும். வளங்களை வீணாக்காமல் நன்கு செயல்படும் சுகாதார மையங்களை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்’ என்று அவா் கூறினாா்.
குடியிருப்பாளா்களுக்கு அணுகக்கூடிய ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்காக மொஹல்லா கிளினிக்குகள் முதன்முதலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் 2015 அக்டோபா் மாதம் நிறுவப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...