
மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்தும் பணிகளில் சில பிரிவினைவாத சக்திகள் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பல சூழல்களில் இத்தகைய பிரிவினைவாதிகளுடன் சில வெளிநாட்டு சக்திகள் இணைந்துகொண்டு நாட்டின் இறையான்மையை பலவீனமாக்குவதாகவும் விமர்சித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் பாகேஸ்வர் தாம் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 23) பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,
''கடந்த சில நாள்களாக சில பிரிவினைவாத தலைவர்கள் மதத்தை கேலி மற்றும் கிண்டலுக்குள்ளாக்கி மக்களை பிளவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு சில வெளிநாட்டுத் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து அவர்களை ஊக்குவிக்கின்றனர்.
இந்து மதத்தை வெறுக்கும் மக்கள், நூற்றாண்டுகளாக நாட்டில் ஏதோவொரு பகுதியில் இருந்துகொண்டுதான் உள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.
மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாகிவருவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி விமர்சித்திருந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி,
''அடிமை மனநிலையில் வீழ்ந்தவர்கள் தொடர்ந்து நமது நம்பிக்கைகளையும், சடங்குகளையும், கோயில்களையும் விமர்சித்து வருகின்றனர்.
நமது கலாசாரம், கொள்கைகள், விழாக்கள், பாரம்பரியங்கள் மற்றும் உடைகள் என அனைத்தின் மீதும் அவதூறு பரப்புகிறார்கள். இயல்பிலேயே முற்போக்கான மதத்தையும் கலாசாரத்தையும் முடக்கத் துடிக்கிறார்கள். நமது சமூகத்தைப் பிரிக்கின்றனர். நமது ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்பதே அவர்களின் கொள்கை.
இந்த நேரத்தில் தீரேந்திர சாஸ்த்ரி ஒற்றுமை என்ற மந்திரத்தின் மூலம் மக்களை விழிப்படையச் செய்து இணைத்து வருகிறார். தற்போது சமூகத்துக்காகவும் மக்களுக்காகவும் புதிய தீர்மானத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
மக்கள் பயனடையும் வகையில் புற்றுநோய் மருத்துவமனையைக் கட்டுகிறார். பாகேஸ்வர் தாமின் ஆசி உங்கள் அனைவருக்கும் இங்கு கிடைக்கும். முறையான சிகிச்சை, உணவு வளமான வாழ்வு இங்கு உறுதி செய்யப்படும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சிக்கிம்: அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகள்! 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.