
பாஜகவின் தவறான செயல்களுக்கு ஆர்எஸ்எஸ் துணைபோகிறதா என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு எழுதிய கடிதத்தில் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கேள்வியெழுப்பி உள்ளார்.
தில்லியில் அடுத்த மாதம் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில், மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கயா மற்றும் வங்கதேச அகதிகள் வாக்காளர் அட்டைகளை பெற ஆம் ஆத்மி உதவி வருவதாக பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது.
இதனிடையே, தில்லி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பூர்வாஞ்சலி வாக்காளர்களின் பெயரை பாஜக நீக்கி வருவதாகவும் வாக்காளர்களுக்கு பணம் அளித்து வருவதாகவும் ஆம் ஆத்மி விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "வாக்காளர் பட்டியலிலிருந்து பூர்வாஞ்சலி மற்றும் பட்டியலின சமூகத்தினரின் பெயர்களை பாஜக நீக்கி வருகிறது. வாக்குளை விலைக்கு வாங்கும் விதமாக வாக்காளர்களுக்கு பாஜக பணம் அளித்து வருகிறது. இதற்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு அளிக்கிறதா' என்று கேஜரிவால் கேள்வியெழுப்பி உள்ளார்.
பாஜக பதில் கடிதம்: முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புத்தாண்டு தீர்மானமாக தனது பொய்யான, நேர்மையற்ற அரசியல் நடைமுறைகளை கைவிட வேண்டும் என்று பாஜகவின் தில்லி தலைவர் வீரேந்திர சச்தேவா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக வீரேந்திர சச்தேவா கேஜரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
புத்தாண்டு வாழ்த்துகள். சிறு வயதிலிருந்தே புத்தாண்டு தினத்தின்போது கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு நல்ல மற்றும் புதிய ஒன்றைத் தொடங்க நாம் அனைவரும் தீர்மானம் செய்கிறோம்.
அதன்படி, 2025- ஆம் ஆண்டின் முதல் நாளில், நேர்மையற்ற மற்றும் பொய்கூறும் அரசியல் நடைமுறைகளை கைவிட்டு, அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டுவர பாடுபடுவீர்கள் என்று நம்புகிறேன்.
தனது புத்தாண்டு தீர்மானத்தின் ஒரு பகுதியாக, கேஜரிவால் தனது குழந்தைகளின் பெயரில் சத்தியம் செய்யாமலிருப்பது, மதுபானத்தை ஊக்குவித்ததற்காக மன்னிப்பு கேட்பது, யமுனையைச் சுத்தம் செய்வதாக தவறான உறுதிமொழிகளை வழங்கியதற்காக மன்னிப்புக் கேட்பது என தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொய் வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் தில்லியின் பெண்கள், பெரியவர்கள் மற்றும் மத சமூகங்களின் உணர்வுகளுடன் விளையாடுவதை நிறுத்துவீர்கள் என்றும், அரசியல் ஆதாயத்திற்காக தேச விரோத சக்திகளின் நன்கொடைகளை ஏற்காமல் இருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.
நீதியின் பாதையில் நடக்க கடவுள் உங்களுக்கு பலம் தரட்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.