
ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட பிரசாந்த் கிஷோருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும் அந்த விண்ணப்பத்தை அவர் பூர்த்தி செய்ய மாறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பிகாரில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் முதல் நிலைத் தேர்வு டிச. 13ஆம் தேதி நடைபெற்றது. இதில் வினாத்தாள்களை குறிப்பிட்ட மையங்களில் மட்டும் தாமதமாகக் கொடுத்தது உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி வந்தனர்.
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். டிச. 30ஆம் தேதி ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்னா காந்தி திடலில் தேர்வர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடந்த 2ஆம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவரைக் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது,
''காலை 5 முதல் 11 மணி வரை காவல் துறையினரின் வாகனத்திலேயே அமரவைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டேன். எங்கு செல்கிறோம் என்பதை பலமுறை கேட்டும் யாரும் பதிலளிக்கவில்லை. 5 மணிநேரத்துக்கு பிறகு எனக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அழைத்துச்சென்றனர். ஆனால், நான் ஒத்துழைக்கவில்லை. மருத்துவர்களிடமும் இதனைத் தெரிவித்தேன். ஆனால் காவல் துறையினர் மருத்துவர்களை சமாதானம் செய்து மருத்துவப் பரிசோதனை செய்ய ஒப்புக்கொள்ள வைத்தனர்.
நான் மருத்துவப் பரிசோதனைக்கு உடன்படவில்லை என்பதை காவல் துறையினர் பதிவு செய்துகொண்டனர். பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது. அதில், நான் எந்தத் தவறும் செய்யக் கூடாது என எழுதப்பட்டிருந்தது. இதனால், ஜாமீனை நான் நிராகரித்தேன். சிறை செல்வதற்குக் கூட எனக்கு சம்மதம்தான்'' எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.