
தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும் என்றும், வாக்குகள் பிப். 8-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
தில்லி பேரவைத் தேர்தல் அறிவிப்பு தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது: தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும். மகாராஷ்டிரத்தில் மேற்கொண்டதுபோன்று, புதன்கிழமை (பிப். 5) வாக்குப் பதிவை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதனால் அதிகமான மக்கள் வாக்களிக்க வருவார்கள்.
வேட்புமனு தாக்கல் ஜன. 10-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜன. 17. வேட்புமனுக்கள் பரிசீலனை ஜன. 18-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற கடைசித் தேதி ஜன. 20. வாக்குப் பதிவு பிப். 5-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப். 8-ஆம் தேதியும் நடைபெறும். தேர்தல் நடைமுறைகள் பிப்.10-க்கு முன் முடிவுக்கு வரும்.
தில்லியில் உள்ள 70 தொகுதிகளில் 58 பொதுத் தொகுதிகள். 12 தனித் தொகுதிகளாகும். வாக்காளர் பட்டியலின்படி, தில்லியில் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.49 லட்சம் பேர்ஆண்கள், 71.74 லட்சம் பேர் பெண்கள் மற்றும் 1,261 பேர் திருநங்கைகள். இவர்களில் 25.89 லட்சம் இளம் வாக்காளர்களும், 2.08 லட்சம் முதல் முறை வாக்காளர்களும்,100 வயதுக்கு மேற்பட்டவர்கள் 830 பேரும் அடங்குவர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 13,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
ஜம்மு-காஷ்மீரில்... ஜம்மு - காஷ்மீரில் உள்ள பட்கம் மற்றும் நக்ரோட்டா பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடும் பனிப்பொழிவு காரணமாக, அங்கு இடைத்தேர்தல் பின்னர் நடத்தப்படும். இத்தேர்தலை நடத்த ஏப்ரல் வரை எங்களுக்கு அவகாசம் உள்ளது.
மேற்கு வங்கத்தில் பசிர்ஹட், குஜராத்தில் விசாவதர் ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இரண்டு விவகாரங்களிலும், தேர்தல் மனுக்கள் நிலுவையில் உள்ளன. அதனால் விதிகளின்படி இடைத்தேர்தல்களை மேற்கொள்ள முடியாது என்றார் அவர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல்
தமிழகத்தின் ஈரோடு கிழக்கு, உத்தர பிரதேசத்தின் மில்கிபூர் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் (பிப். 5) தில்லி தேர்தல் அட்டவணையின்படி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14-ஆம் தேதி காலமானதையடுத்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 6-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,09,636 பேர், பெண் வாக்காளர்கள்1,16, 760 பேர், இதர வாக்காளர்கள் 37 பேர் என மொத்தம் 2,26, 433 வாக்காளர்கள் உள்ளனர்.
முன்னதாக, ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா. 2023-ஆம் ஆண்டு ஜனவரியில் காலமானதைத் தொடர்ந்து, அங்கு பிப். 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.