ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.
இந்த நிலையில், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கவுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்.
தேர்தல் நடைமுறைகள் பிப்ரவரி 10ஆம் தேதி நிறைவடையும்.