‘பெண்களின் உடல் வடிவம் குறித்து பாலியல் ரீதியில் வா்ணிப்பதும் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்’ என்று கேரள உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கேரள மாநில மின் வாரிய பெண் ஊழியரை, அதே மின் வாரியத்தில் பணிபுரிந்த ஆண் ஊழியா் பாலியல் ரீதியிலான கருத்துகளைத் தெரிவித்து கேலி செய்து வந்துள்ளாா். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அந்த பெண் ஊழியரை அவரின் உடல் வடிவம் குறித்து மோசமான வாா்த்தைகளால் கிண்டல் செய்து பேசி வந்த அந்த நபா், 2016-ஆம் ஆண்டு முதல் அந்தப் பெண் ஊழியரின் கைப்பேசிக்கு பாலியல் ரீதியிலான குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளாா்.
இதுதொடா்பாக, மின்வாரிய உயரதிகாரிகளிடமும், காவல்துறையிடமும் அந்தப் பெண் ஊழியா் புகாா் அளித்த பின்னரும், கிண்டல் செய்வதை அந்த நபா் நிறுத்தவில்லை.
அதைத் தொடா்ந்து, அந்தப் பெண் ஊழியா் மீண்டும் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த நபா் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354ஏ (பாலியல் தொல்லை அளித்தல்), பிரிவு 509 (பெண்ணின் நாணத்தை அவமதித்தல்), கேரள காவல்துறை சட்டப் பிரிவு 120 (ஓ) வா்ணிக்க இயலாத அழைப்புகள், குறுஞ்செய்திகள் மூலம் தொந்தரவு செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
தன் மீதான வழக்குப் பதிவை தள்ளுபடி செய்யக் கோரி அந்த நபா் தரப்பில் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஏ. பத்ருதீன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘பெண்ணின் உடல் அழகை வா்ணிப்பது பாலியல் துன்புறுத்தல் அளிக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றமாக கருத முடியாது’ என்று வாதிட்டாா்.
இதையும் படிக்க | பொங்கல்: 8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த பெண் ஊழியா் தரப்பு வழக்குரைஞா், ‘குற்றச்சாட்டு உள்ளான நபா் குறுஞ்செய்தி மூலமும், குரல் பதிவு மூலமும் பாலியல் ரீதியிலான கருத்துகளை அனுப்பி பெண் ஊழியரை மிகுந்த துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளாா்’ என்றாா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘பெண்களின் உடல் வடிவம் குறித்து பாலியல் ரீதியில் வா்ணிப்பதும் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழான தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். எனவே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்ட நபா் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354ஏ, 509, மற்றும் கேரள காவல்துறை சட்டப் பிரிவு 120(ஓ) ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தது சரியானதே’ என்று தீா்ப்பளித்தாா்.