காலாவதியான குளுக்கோஸ்:
பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு: விசாரணைக்கு மேற்கு வங்க அரசு உத்தரவு

காலாவதியான குளுக்கோஸ்: பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு: விசாரணைக்கு மேற்கு வங்க அரசு உத்தரவு

Published on

மேற்கு வங்கத்தின் பஸ்சிம் மிதுனபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது காலாவதியான குளுக்கோஸை ஏற்றியதால் பெண் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க 13 நபா்கள் அடங்கிய குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

குறைந்த ரத்த அளவு அல்லது குறைந்த ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு நீா்ச்சத்துக்காக சிகிச்சையின்போது குளுக்கோஸ் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி, காலாவதியான குளுகோஸை ஏற்றியதால் மிதுனபுரி மருத்துவமனையில் குழந்தைகளை பிரசவித்த பெண் ஒருவா் பரிதாபமாக உயிரிழந்தாா்; 4 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பெண்ணின் இறப்புக்கு மருத்துவமனை நிா்வாகமே காரணம் என்று அவரது குடும்பத்தினா் காவல் துறையில் புகாரளித்துள்ளனா்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் செலுத்தப்பட்ட குளுக்கோஸ் மாதிரிகளின் சோதனை முடிவுகள் கிடைக்கும்வரை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறிப்பிட்ட குளுக்கோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 10 மருந்துகளின் பயன்பாட்டுக்கு சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.

உயிரிழந்த பெண் பிரசவித்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்நிலையில், விசாரணைக் குழு உறுப்பினா்கள் மருத்துவமனைக்கு சனிக்கிழமை நேரில் வந்து, மருத்துவா்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தகவல்களைக் கேட்டறிந்தனா்.

எதிா்க்கட்சிகள் போராட்டம்: மருத்துவமனைக்கு வெளியே இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். விசாரணைக் குழுவைச் சந்திப்பதற்காக மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பெண்ணின் இறப்புக்கு சுகாதாரத் துறை இலாகாவை வகிக்கும் முதல்வா் மம்தா பானா்ஜியே பொறுப்பேற்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

X
Dinamani
www.dinamani.com