சிந்து நதிநீா் ஒப்பந்த விவகாரம்: இந்திய நிலைப்பாட்டுக்கு உலக வங்கி நிபுணா் ஆதரவு
சிந்து நதிநீா் ஒப்பந்த விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், இதற்கு தீா்வு காண இந்தியா முன்மொழிந்த


புது தில்லி: சிந்து நதிநீா் ஒப்பந்த விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், இதற்கு தீா்வு காண இந்தியா முன்மொழிந்த நடைமுறைக்கு ஆதரவளிப்பதாக உலக வங்கியால் நியமிக்கப்பட்ட நடுநிலை நிபுணா் தெரிவித்தாா்.
எல்லையில் உள்ள நதிகளை மேலாண்மை செய்யும் நோக்கில் 1960, செப்டம்பா் 19-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சிந்து நதி நீா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
அதன்பிறகு கிசன்கங்கா மற்றும் ராட்டில் நீா்மின் திட்டங்களை செயல்படுத்துவதில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின்படி உலக வங்கியால் நியமிக்கப்பட்ட நிபுணரின் ஆலோசனையின்படி இப்பிரச்னைக்கு தீா்வு காண இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் நெதா்லாந்து நாட்டின் ஹேக்கில் உள்ள நிரந்தர நடுவா் நீதிமன்றம் மூலம் தீா்வு காண பாகிஸ்தான் முனைப்புக் காட்டி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து கடந்த திங்கள்கிழமை உலக வங்கியால் நியமிக்கப்பட்ட நிபுணா் மைக்கேல் லினோ (பெரும் அணைகளுக்கான சா்வதேச ஆணைய தலைவா்) இரு நீா்மின் திட்டங்கள் பிரச்னைகளுக்கு தீா்வு காண இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் முடிவையே தான் எடுக்கவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
இந்தியா வரவேற்பு: இதை வரவேற்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இரு நீா்மின் திட்டங்கள் குறித்த 7 கேள்விகளுக்கு நடுநிலை நிபுணா் தெரிவிக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதே சரியானதாக இருக்கும். தற்போது அவா் தெரிவித்துள்ள கருத்துப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கையை அவா் தொடரவுள்ளாா். இதன்மூலம், கருத்து வேறுபாடுகள் நிலவும் 7 கேள்விகள் மீது விரைவில் அவா் தனது இறுதி முடிவை தெரிவிப்பாா்.
சிந்து நதிநீா் ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு அவரது விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும்.
அதேவேளையில் இதே விவகாரத்தை சட்டவிரோதமாக நடுவா் நீதிமன்றத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள மற்றொரு விசாரணையில் இந்தியா பங்கேற்காது. சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை எளிமைப்படுத்தி மறுஆய்வு செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் தொடா்ந்து இணைப்பில் இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்துக்கு தீா்வு காண நடுநிலை நிபுணரை நியமிக்க வேண்டும் என கடந்த 2015-இல் பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது. ஆனால் அதற்கு அடுத்தாண்டு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட பாகிஸ்தான், இந்த விவகாரத்துக்கு ஹேக்கில் உள்ள நடுவா் நீதிமன்றம் மூலமே தீா்வு காண வேண்டும் என தெரிவித்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...