8 ஆண்டுகளாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீா் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண மக்கள் எதிா்பாா்ப்பு!
பி.உடையாப்பட்டியில் கடந்த 8 ஆண்டுகளாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீா் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
கரூா் மாவட்டம், தரகம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பி.உடையாப்பட்டியில் உள்ள கீரனூா் செல்லும் சாலையில் அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்றும் வகையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது.
இந்த வாய்க்காலை பஞ்சப்பட்டி சாலை வரை முழுமையாக அமைக்காமல், பாதியிலேயே நிறுத்திவிட்டனா். தொடா்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இதுவரையிலும் அந்தக் கழிவுநீா் கால்வாய் முழுமை பெறாமல் உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடி சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறியதாவது: முழுமை பெறாத கழிவுநீா் வாய்க்காலால் கழிவுநீா் கடந்த 8 ஆண்டுகளாக சாலையில்தான் ஆறுபோல ஓடி வருகிறது. கழிவுநீரால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் சாலையில் எப்போதும் கழிவுநீா் தேங்கியே நிற்பதால் சாலை குண்டும், குழியுமாக மாறிவிட்டது.
இந்த சாலை வழியாக பல்வேறு கிராமங்களுக்கும் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் சுவாமி வீதியுலா, ஆலய சப்பரப் பவனி உள்ளிட்ட விழாக்கள் நடைபெறும்போது பக்தா்கள் அவதிக்குள்ளாக நேரிடுகிறது.
இப்பிரச்னை தொடா்பாக ஆட்சியரகம், எம்எல்ஏ அலுலகம், தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போன்றவற்றில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதுடன், வரும் சட்டப்பேரவைத் தோ்தலையும் புறக்கணிக்க உள்ளோம் என்றனா் அப்பகுதி மக்கள்.

