மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்: தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு: இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜனவரி 2025, 8:11 pm

Din

புது தில்லி, ஜன. 30: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையுடன் வெள்ளிக்கிழமை (ஜன. 31) தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றிய பிறகு, பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இரு அவைகளிலும் தாக்கல் செய்வாா்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், அடுத்த நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி குறித்தும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படும்.

மத்திய பட்ஜெட்டை அமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்கிறாா். இது, அவா் தொடா்ந்து 8-ஆவது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும்.

அதன் பின்னா் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 13-ஆம் தேதி வரையில் நடைபெறும் முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, ரயில்வே சட்டத் திருத்த மசோதா, பேரிடா் மேலாண்மை சட்டத் திருத்த மசோதா, எண்ணெய் வயல் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத் திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் மசோதா உள்பட 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

விவாதம் அனல் பறக்கும்: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 போ் உயிரிழந்த சம்பவம், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா் சரிவு, தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு ஆகிய விவகாரங்களை இந்தக் கூட்டத் தொடரில் எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பட்ஜெட் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.