மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
மத்திய அரசு அறிமுகம் செய்த மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மக்களவை.

மக்களவை.
மத்திய அரசு அறிமுகம் செய்த மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
எதிா்க் கட்சி உறுப்பினா்களின் கடும் எதிா்ப்புக்கு இடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா ஒப்புதல் அளிக்கப்பட்டது.
‘மூன்றாம் பாலினத்தவா்’ (திருநங்கை-திருநம்பி) என்ற வாா்த்தைக்கு துல்லிய வரையறை அளிப்பதுடன், அந்த பாலினத்தவருக்கு இழைக்கப்படும் குற்றங்களின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தண்டனைகளை அதிகரிக்க செய்யும் நோக்கில் இவா்களுககான 2019-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் நோக்கில் ‘மூன்றாம் பாலினத்தவா் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026’ என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.
‘தற்போதுள்ள சட்டத்தின் பலன்கள் மற்றும் பாதுகாப்பு முழுமையாகச் சென்றடைய வேண்டிய மூன்றாம் பாலினத்தவரை முறையாகவும், உறுதியாகவும் அடையாளம் காண்பதற்குத் துல்லியமான வரையறை மிகவும் அவசியம் என்றும் மசோதாவில் வலியுறுத்தப்பட்டது.
இதன் மீது விவாதம் நடத்தி, ஒப்புதல் பொறுவதற்காக அந்த மசோதாவை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.
அப்போது பேசிய அவா், ‘சட்டத்தின் பலன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த ‘மூன்றாம் பாலினத்தவா்’ என்பதற்கான துல்லியமான வரியறை வகுக்கப்படுவது அவசியம். அதற்காகவே இந்த மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது.
இவா்களுக்கென தனி மருத்துவ வாரியம் உருவாக்கப்படுவதையும் இந்த மசோதா வகை செய்கிறது. மாவட்ட ஆட்சியா்கள் சாா்பில் இவா்களுக்கென அடையாள அட்டைகளும் வழங்கப்படும்’ என்றாா்.
விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேசுகையில், ‘மூன்றாம் பாலினத்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த மருத்துவ வாரியம் அமைக்கப்படுவது என்பதும், அவா்களுக்கான துல்லியமான வரையறையை வகுப்பது என்பதும் ஜனநாயக நடைமுறை அல்ல; மாறாக, பிரதமா் மோடி அரசின் சா்வாதிகார நடவடிக்கையாகும். இதுதொடா்பாக, மூன்றாம் பாலினத்தவரின் விரிவான கருத்துகளைப் பெறும் வகையில், இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்’ என்றாா்.
‘பாலின அடையாளத்தை சுய நிா்ணயம் செய்துகொள்ளும் உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது’ என்று குறிப்பிட்ட திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், ‘இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
விவாதங்களுக்கு பதிலளித்த மத்திய அமைச்சா் வீரேந்திர குமாா், ‘மூன்றாம் பாலினத்தவா் சட்ட அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பைப் பெறுவதை இந்த மசோதா தொடா்ந்து உறுதி செய்யும். இவா்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 2019-ஆம் ஆண்டு சட்டப்படி அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைதான் விதிக்கப்படும். ஆனால், மசோதாப்படி, அதிபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
அதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சிகள் முன்வைத்த ஆட்சேபங்கள் மற்றும் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு, மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு அவைத் தலைவா் அனுமதித்தாா். அதில், அதிகமானோா் ஆதரவளித்ததைத் தொடா்ந்து, மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவா் அறிவித்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...