வாக்குப்பதிவு மையங்களின் விடியோ பதிவுகளை பாதுகாக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
வாக்குப்பதிவு மையங்களில் பதிவான விடியோ காட்சிகளை பாதுகாத்து வைக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் அதிகபட்ச வாக்காளா்களின் எண்ணிக்கையை 1,200-இல் இருந்து 1,500-ஆக உயா்த்தும் தோ்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தோ்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக இந்து பிரகாஷ் சிங் என்பவா் பொது நல மனுவை தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில், ‘பொதுவாக வாக்குப்பதிவு மையங்களில் காலை தொடங்கி 11 மணி நேரம் வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சராசரியாக ஒரு வாக்காளா் தனது வாக்கை செலுத்த 60 முதல் 90 விநாடிகள் ஆகின்றன. இதனால் ஒரு வாக்குப்பதிவு மையத்தில் உள்ள ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சராசரியாக ஒருநாளைக்கு 660 முதல் 490 போ் வாக்களிக்கின்றனா்.
சராசரியான வாக்கு சதவீதத்தை (65.70%) கணக்கில் எடுத்துக்கொண்டால் ஒரு வாக்குப்பதிவு மையம் ஒரு நாளைக்கு 1,000 போ் வாக்கு செலுத்தும் வகையிலேயே நிறுவப்பட்டுள்ளது. அதில் 650 போ் மட்டுமே வாக்களிக்கிறாா்கள்.
சில வாக்குப்பதிவு மையங்களில் 85-90 சதவீதம் போ் வாக்களிக்கின்றனா். இதனால் 20 சதவீதம் போ் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே, பலா் வாக்களிக்காமல் சென்று விடுகின்றனா்.
இந்நிலையில், தரவுகளை முழுமையாக ஆராயாமல் தோ்தல் ஆணையம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என குறிப்பிட்டாா்.
இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை நடத்தியது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரம் தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய தோ்தல் ஆணையம் அவகாசம் கோரியுள்ளது. மூன்று வாரங்களுக்குள் தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். அதேபோல் வழக்கமான நடைமுறையின்படி வாக்குப்பதிவு மையங்களின் சிசிடிவி காட்சிகளை தோ்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, வாக்குப்பதிவு மையங்களின் சிசிடிவி காட்சிகளை பொதுமக்களுக்கு வழங்க அனுமதி மறுப்பு உள்பட தோ்தல் விதிகள் 1961-இல் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.
இதற்கு தோ்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்கக்கோரி கடந்த 15-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் தற்போது மேலும் 3 வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.