
வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் இது தொடா்பான தீா்மானத்தை கொண்டுவர எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் பெறவுள்ளதாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு நேற்று கூறியிருந்தார்.
அதாவது, உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றங்களில் பதவியில் உள்ள ஒரு நீதிபதியை பதவிநீக்கம் செய்வது என்பது அவ்வளவு எளிதான நடைமுறை அல்ல.
நீதிபதிகளுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கான 1968-ஆம் ஆண்டு சட்டத்தின் படி, உச்ச நீதிமன்ற, உயா் நீதிமன்ற நீதிபதியை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்ற இரு அவைகளிலும் பதவிநீக்கத் தீா்மானம் கொண்டுவரப்பட வேண்டும்.
இந்த பதவி நீக்கத் தீா்மானத்தில் குறைந்தபட்சம் மாநிலங்களவை உறுப்பினா்கள் 50 பேரும், மக்களவை உறுப்பினா்கள் 100 பேரும் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டு அவைத் தலைவரிடம் வழங்க வேண்டும்.
இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், மூன்று பேர் கொண்ட குழு, நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும்.
நீதிபதி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்று, விசாரணைக் குழு உறுதிசெய்யும்பட்சத்தில், நாடாளுமன்ற அவையில் இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த தீர்மானத்தின் மீது, நாடாளுமன்ற அவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் - மூன்றில் இரண்டு பங்குக்கு மேலான உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும்.
எந்த அவையில் இந்த தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டதோ, அந்த தீர்மானம் அடுத்த அவைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கும் பெரும்பாலான உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட வேண்டும்.
நீதிபதியின் பதவி நீக்க தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அதன்படி, நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால்தான் ஒரு நீதிபதியானவரை, பதவியில் இருந்து நீக்கம் செய்ய முடியும் என்கிறது அரசியலமைப்புச் சட்டம்.
அந்த வகையில், தில்லியில் உள்ள வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய முக்கிய எதிா்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது.
ஜூலை 21-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.