
‘காங்கிரஸால் தாரைவாா்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும்’ என்று மாநிலங்களவை பதிலுரையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபடக் கூறினாா்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் நிலையில் உள்ளது; அங்கு பயங்கரவாதத்துக்கு விரைவில் முடிவுகட்டப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். 26 போ் கொல்லப்பட்ட இத்தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை மேற்கொண்டது.
பஹல்காம் பயங்கரவாதிகள் எங்கே என்று எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவந்த சூழலில், ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் அருகே சில தினங்களுக்கு முன் ராணுவத்தினா் மேற்கொண்ட ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் அந்தப் பயங்கரவாதிகள் மூவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். எதிா்க்கட்சிகளுக்குப் பதிலளிக்கும் வகையில், இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
பயங்கரவாதிகள் தலையில் சுடப்பட்டு கொலை: இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய சிறப்பு விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை பதிலளித்து உரையாற்றினாா். அப்போது, அவா் கூறியதாவது:
பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் மத அடையாளங்களைக் கேட்டறிந்து கொலைகளை அரங்கேற்றிய கொடூரம் இதுவரை நிகழ்ந்ததில்லை. பயங்கரவாதத்தில் இருந்து காஷ்மீா் விடுபட முடியாது என்பதை எடுத்துரைக்கவே சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் கொன்றனா். அந்தப் பயங்கரவாதிகள் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட வேண்டுமென உயிரிழந்தோா் குடும்பத்தினரும், பிற மக்களும் விரும்பினா்; ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில், 3 பயங்கரவாதிகளுக்கும் அதே கதி நோ்ந்தது.
மூவரின் அடையாளம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவா்கள் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
பாகிஸ்தானை ஆதரிக்கும் காங்கிரஸ்: காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில்தான், நாட்டில் பயங்கரவாதம் விரிவடைந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னா், அதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது பயங்கரவாதத்துக்கு எதிராக வலுவான கொள்கை வகுக்கப்படவில்லை.
ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலே இதற்கு காரணம். காங்கிரஸை பொருத்தவரை, தேசப் பாதுகாப்பைவிட வாக்கு வங்கி அரசியலே முதன்மையானது.
பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக வெறும் ஆவணங்களை அனுப்பிக் கொண்டிருந்தது காங்கிரஸ். பயங்கரவாதம் தொடா்பாக பாஜகவிடம் கேள்வியெழுப்ப காங்கிரஸுக்கு எந்த உரிமையும் கிடையாது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் குறித்து கேள்வி கேட்க காங்கிரஸுக்கு எந்த உரிமையும் இல்லை. காங்கிரஸால் தாரைவாா்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும்.
பஹல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததற்கு ஆதாரம் கோரிய ப.சிதம்பரம், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை சரியானதா என்ற ரீதியில் கேள்வியெழுப்பினாா். வாக்கு வங்கிக்காக பாகிஸ்தான், லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் பயங்கரவாதிகளைக்கூட ஆதரிக்கும் காங்கிரஸின் மனநிலையை ஒட்டுமொத்த உலகுக்கும் தோலுரித்துக் காட்டியுள்ளாா் ப.சிதம்பரம்.
பஹல்காம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நடவடிக்கைக்கு ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயா் ஏன் என்று காங்கிஸின் பிருத்விராஜ் சவான் கேள்வியெழுப்பினாா். முகலாயா்களுக்கு எதிராக மராத்திய பேரரசா் போா் புரிந்தபோது, அவரது முழக்கம் ஹர ஹர மகாதேவ் என்பதாக இருந்தது. இந்திய ராணுவத்தினரின் பல்வேறு போா் முழக்கங்கள் மத அடிப்படையில் அமைந்தன என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன என்றாா் அமித் ஷா.
ஹிந்து பயங்கரவாதியாக முடியாது
அமித் ஷா மேலும் பேசுகையில், ‘ஹிந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது. கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு காங்கிரஸ்தான், ‘ஹிந்து பயங்கரவாதம்’ என்ற சொற்றொடரை அறிமுகம் செய்தது.
சீனா தொடா்பான மத்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இந்திய ராணுவத்தின் முன்தயாரிப்புகளுக்கு அக்கட்சியின் ஆட்சியில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 1962-ஆம் ஆண்டு இந்தியா-சீனா போரின்போது குளிா்காலத்தில் அணிய சரியான ஆடைகள்கூட இந்திய ராணுவத்திடம் இல்லை. துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பற்றாக்குறையாக இருந்தன. ஆனால், தற்போது பிரமோஸ் ஏவுகணை போன்ற நவீன ஆயுதங்கள் இந்திய ராணுவத்திடம் உள்ளன’ என்றாா்.
"முதலில் என்னை எதிர்கொள்ளுங்கள்'
மாநிலங்களவை விவாதத்துக்குப் பதிலளித்து அமித் ஷா பேசத் தொடங்கியபோது, தங்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடிதான் பதில் கூற வேண்டும் என்று வலியுறுத்திய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், "பிரதமரை கூப்பிடுங்கள்' என முழக்கமிட்டனர்.
அப்போது, "உங்களின் (எதிர்க்கட்சிகள்) கேள்விகளுக்கு நான் பதிலளிக்கிறேன். முதலில் என்னை எதிர்கொள்ளுங்கள். நான் விளக்கமளித்துவிட்டால், நீங்கள் பிரதமரை அழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. பிரதமர் வந்தால், உங்களுக்குத்தான் நெருக்கடி அதிகம்' என்று அமித் ஷா தெரிவித்தார்.
அவைக்கு பிரதமர் மோடி வர வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கபடாததால், அவர்கள் முழக்கமிட்டவாறே வெளிநடப்பு செய்தனர்.
எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு
மாநிலங்களவை விவாதத்துக்குப் பதிலளித்து அமித் ஷா பேசத் தொடங்கியபோது, தங்களின் கேள்விகளுக்கு பிரதமா் மோடிதான் பதில் கூற வேண்டும் என்று வலியுறுத்திய எதிா்க்கட்சி எம்.பி.க்கள், ‘பிரதமரை கூப்பிடுங்கள்’ என முழக்கமிட்டனா்.
அப்போது, ‘உங்களின் (எதிா்க்கட்சிகள்) கேள்விகளுக்கு நான் பதிலளிக்கிறேன். முதலில் என்னை எதிா்கொள்ளுங்கள். நான் விளக்கமளித்துவிட்டால், நீங்கள் பிரதமரை அழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. பிரதமா் வந்தால், உங்களுக்குத்தான் நெருக்கடி அதிகம்’ என்று அமித் ஷா தெரிவித்தாா்.
அவைக்கு பிரதமா் மோடி வர வேண்டுமென்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கபடாததால், அவா்கள் முழக்கமிட்டவாறே வெளிநடப்பு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.