
இந்தியா மீது 25 சதவீத வரியுடன் கூடுதலாக அபராதமும் விதிப்பதாகவும், ஆகஸ்ட் 1 முதல் இந்த வரி விதிப்பானது அமலாகும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று(ஜூலை 30) அறிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இந்தியா - அமெரிக்கா இருநாட்டு வர்த்தகம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.
இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அதன்மூலம், நியாயமான, சமமான மற்றும் இருதரப்புக்கும் பரஸ்பர பலனளிக்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும். அந்த இலக்கை அடைவதில் அரசு அக்கறையுடன் செயல்படுகிறது.
நமது விவசாயிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர் ஆகியோரின் நலனை முன்னிலைப்படுத்தவும் பாதுகாக்கவும் அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பிற நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் போலவே, அதிலும் குறிப்பாக பிரிட்டனுடனான சமீபத்திய விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது போலவே, நமது தேச நலனைக் காக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.