
பெங்களூர்: தங்களது கிரிக்கெட் சாம்பியன்களை நேரில் காண வேண்டும் என்ற ஆவலோடு சென்ற இளைஞர்களும் இளைஞிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவமனையில் அவர்களது பெற்றோரின் அழுகுரல் அனைவரையும் கலங்க வைக்கிறது.
வீட்டில் நள்ளிரவு வரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துவிட்டு, செவ்வாய்க்கிழமை தங்களது கிரிக்கெட் ஹீரோக்களை நேரில் பார்க்க வீட்டில் இருந்து கிளம்பியவர்கள் பலரும் மருத்துவமனையில் கிழிந்த கந்தல் துணிகளைப் போல கொண்டு வந்து போடப்பட்டிருந்ததைப் பார்த்த பெற்றோர்.. கொண்டாடவே சென்றார்கள்.. சாக அல்ல.. இங்குதான் செல்கிறோம் என்று சொல்லியிருந்தால் விட்டிருக்கவே மாட்டோமே என்று சொல்லி கதறி அழுவது பார்ப்பவர்களைக் கலங்க வைக்கிறது.
புதன்கிழமை, ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க சின்னசாமி அரங்கில் குவிந்தபோது, உடல் நசுக்கி 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து பெண்மணி ஒருவர் கூறுகையில், என் மகள் போனில் அழைத்து மருத்துவமனைக்கு வருமாறு கூறி அழுதார். அங்குச் சென்றபோதுதான், எனது பேத்தி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது தெரிய வந்தது. இப்போதுதான் 11ஆம் வகுப்பில் சேர்ந்திருந்தார் என்று சொல்லி அழுகிறார்.
மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் தனது மகனின் உடலைப் பார்த்த அவரது தாய், சின்னு.. அம்மா வந்திருக்கிறேன். எழுந்திரிடா என்று கிழிந்த துணியுடன் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் மகனைப் பார்த்து கதறுகிறார். அவர் திறந்துவைத்துப் பணியாற்றிக் கொண்டிருந்த லேப்டாப் கூட இன்னும் மூடப்படவில்லை. நீ கண்ணை மூடிவிட்டாயே என்று கதறுவதைப் பார்த்து அவருடன் சென்ற நண்பர்களும் கதறுகிறார்கள்.
வேலையிலிருந்து, கல்லூரியிலிருந்து என பல இளைஞர்கள், பெற்றோருக்கு சொல்லாமல் கூட சின்னசாமி அரங்குக்குச் சென்று கூட்ட நெரிசலில் பலியாகியிருக்கிறார்கள். இங்குதான் செல்கிறேன் என்று சொல்லியிருந்தால் விட்டிருக்க மாட்டேன் என பெற்றோர் கதறுகிறார்கள்.
24 வயது பெண் ஒருவர் இதில் பலியாகியிருக்கிறார். அவருடன் வந்தவர்கள் கூறுகையில் நாங்கள் 12 பேர் ஒன்றாகவே சின்னசாமி அரங்கு வந்தோம். நுழைவாயிலில் நின்றிருந்தபோது, காவல்துறையினர் எங்களை ஒழுங்குபடுத்தி வரிசையில் நிற்க வைத்தனர். ஆனால், எல்லா பக்கத்திலிருந்தும் ரசிகர்கள் எங்களை நெருக்கினார்கள். நாங்கள் கீழே விழுந்தோம். எங்கள் மீது ஏறி ஓடினார்கள். ஆம்புலன்ஸ் வருவதற்குக் கூட வழியில்லை. ஒரு காரைப் பிடித்து அதில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தோம். ஆனால்.. எல்லாம் முடிந்துவிட்டது என்று தோழியின் உடலைப் பார்க்க மருத்துவமனையில் காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள் கண்ணீருடன் கூறியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.