தேனிலவில் கணவரைக் கூலிப்படை வைத்து கொன்ற மனைவி கைது!

மேகாலயாவில் கணவரைக் கூலிப்படை மூலம் கொலை செய்த மனைவி பற்றி...
சோனம், ராஜா ரகுவன்ஷி
சோனம், ராஜா ரகுவன்ஷி (Special arrangement/TNIE)
Published on
Updated on
2 min read

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்த நிலையில், மே 23 ஆம் தேதி அவர்கள் திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினரால் தொடர்புகொள்ள முடியாததால் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர்.

சடலமாக மீட்பு

காணாமல் போன தம்பதியினரைக் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் ரகுவன்ஷி உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியும் கையிலிருந்த மோதரமும் காணாமல் போனதால் கொலையாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்டது. இதனிடையே, அப்பகுதியில் ரத்தக் கறை படிந்த கத்தி மீட்கப்பட்டது.

இரண்டு நாள்களுக்குப் பிறகு பள்ளத்தாக்கு அருகே மவ்க்மா கிராமத்தில் தம்பதியினர் அணிந்திருந்த மழைக்கோட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சோனமை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

கடைசியாக பார்த்தவர்களின் வாக்குமூலம்

மவ்லக்கியத்தில் உள்ள சுற்றுலா வழிகாட்டி ஆல்பர்ட் பிடே, கடந்த சனிக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மே 23 அன்று காலை 10 மணியளவில் மவ்லக்கியத்தில் இளம் தம்பதியினர் மூன்று ஆண்களுடன் சென்றதைக் கண்டதாகவும் அவர்களுடன் சென்ற மூவரும் உள்ளூர் நபர்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

சோனம் கைது

உத்தரபிரதேசத்தின் காஜிபூர் சாலையில் சோனத்தை நேற்றிரவு காவல்துறையினர் கண்டறிந்ததாகவும், அவரே சரணடைவதாக தெரிவித்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாகவும் மேகாலயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காவல்துறையின் இரவு சோதனையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும், ரகுவன்ஷியை கொலை செய்வதற்கு சோனம் பணம் அளித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்ததாகவும் மேகாலயா டிஜிபி தெரிவித்துள்ளார்.

கைதான சோனம் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதி.
கைதான சோனம் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதி.

இதுதொடர்பாக பதிவிட்டுள்ள மேகாலயா முதல்வர்,

”ஒரு வாரத்தில் மூன்று குற்றவாளிகளை மேகாலயா காவல்துறையினர் கைது செய்திருப்பது வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் சரணடைந்துள்ள நிலையில், மேலும் ஒருவரை தேடும் பணி நடைபெறுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை

மேகாலயா காவல்துறையினரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் ரகுவன்ஷி மற்றும் சோனத்தின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவும் வழக்கை சிபிஐக்கு மாற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com