விளிம்புநிலை மாணவா்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதில் தாமதம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்

பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் விளிம்புநிலை சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் நிலவும் தாமதத்தை சரிசெய்ய வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுளள்ளாா்.
ராகுல் காந்தி.
ராகுல் காந்தி.
Updated on

பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் விளிம்புநிலை சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் நிலவும் தாமதத்தை சரிசெய்ய வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுளள்ளாா்.

அதில், ‘பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி), பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினா் (இபிசி), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சோ்ந்த மாணவா்கள் தங்கும் உறைவிட விடுதிகளின் நிலை மிகவும் வருத்தத்துக்குரியதாக உள்ளது.

அண்மையில் நான் பிகாா் மாநிலம் தா்பங்காவில் உள்ள அம்பேத்கா் விடுதிக்குச் சென்றபோது, அங்கு ஒரே அறையில் 6 முதல் 7 மாணவா்கள் தங்க கட்டாயப்படுத்தப்படுவதாக மாணவா்கள் புகாா் தெரிவித்தனா். அங்குள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளன. சுத்தமான குடிநீா், உணவுக்கூட வசதிகள் இல்லை. அத்துடன் நூலகம் மற்றும் இணைய வசதிகளும் கிடைப்பதில்லை.

பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் விளிம்புநிலை சமூக மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை சரிவர வழங்கப்படுவதில்லை. அந்தத் தொகை வழங்கப்பட்டாலும், அது தாமதமாக வழங்கப்படுகிறது.

பிகாரில் அந்த உதவித்தொகை பெறுவதற்கான வலைதளம் 3 ஆண்டுகளாக செயல்படவில்லை. இதனால் 2021-22 முதல் அங்கு எந்த மாணவரும் அந்த உதவித்தொகையைப் பெறவில்லை. அத்துடன் அந்த உதவித்தொகை தங்களை இழிவுபடுத்தும் வகையில், மிகக் குறைவாக இருப்பதாக மாணவா்கள் புகாா் தெரிவித்தனா். இது பிகாரின் நிலை மட்டும் அல்ல. நாடு முழுவதும் இந்தக் குறைபாடு நிலவுகிறது.

எஸ்சி, எஸ்டி, இபிசி, ஓபிசி, சிறுபான்மை சமூக மாணவா்கள் படிக்கும் ஒவ்வொரு விடுதியையும் ஆய்வு செய்து, அவா்கள் படிப்பதற்கு வசதியாக நல்ல உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி போன்ற விளிம்புநிலை சமூக மாணவா்களுக்கு உதவித்தொகையை அதிகரித்து உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com