

பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணம் தொடர்பான வழக்கில் விசாரணையை விரைவுபடுத்துமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸுபீன் கர்க் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமருக்கு ஸுபீன் கர்க் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்த கடிதத்தில், "உங்கள் நிர்வாகத்தின் அரசியலமைப்பு அதிகாரம், நீதி, கண்ணியம் சட்டத்தின் ஆட்சிக்கு அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீதான நம்பிக்கையில் இந்தக் குறிப்பைத் தாழ்மையுடன் முன்வைக்கிறோம்.
ஸுபீன், எங்கள் குடும்ப உறுப்பினர் மட்டுமல்ல; அவர் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் கலாசாரத்தை அடையாளப்படுத்துபவராக இருந்தார். அவரின் அகால மரணத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கையை லட்சக்கணக்கானோர் கோருகின்றனர்.
இந்தச் சம்பவம் நடந்தவுடனேயே, சிங்கப்பூரில் உள்ள அதிகாரிகள் தாமாக முன்வந்து, நடவடிக்கைகளைத் தொடங்கினர். நாங்கள் அஸ்ஸாமின் சிஐடி-யில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தோம். பின்னர், அசாம் அரசு ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.
கிட்டத்தட்ட 3 மாத விசாரணைக்குப் பிறகு, அசாம் காவல்துறை 2,500 பக்கங்களுக்கும் அதிகமான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
துயரத்தில் இருக்கும் நாங்கள், நீதியின் அடிப்படையில் இயங்கும் குடியரசின் குடிமக்களும்கூட. ஸுபீன் கர்க்கின் மரண வழக்கில் தீவிரம், அவசரம், நடுநிலையை உறுதிசெய்ய உங்கள் (பிரதமர்) அலுவலகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். அசாம் மக்கள்தான் எங்கள் ஒரு குடும்பத்தினர்.
இந்த வழக்கில் இந்தியாவில் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
நீதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மூலம் விசாரணையை விரைவாகக் கண்காணிக்க வேண்டும். நீதியானது, காலப்போக்கில் தாமதமாகவோ வேகமற்றதாகவோ இருத்தல் கூடாது.
மேலும், குற்றவாளி கடுமையான தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் ஜாமீனில் விடுவிக்கப்படக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
அஸ்ஸாமை சேர்ந்த பாடகர் ஸுபீன் கர்க், கடந்த மாதம் சிங்கப்பூரில் கடலில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.