
கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. கேரளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட சேதத்தில் ஞாயிற்றுக்கிழமை 4 பேர் பலியாகியுள்ளனர்.
வட மாவட்டங்கள் மழையின் தாக்கத்தால், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஞாயிறு மாலை முதல் கண்ணூரில் கனமழை பெய்துவருவதையடுத்து, அங்குள்ள சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது.
காசர்கோட்டில், தேஜஸ்வினி புழா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், நீர்நிலைகளுக்குள் செல்வதைத் தவிர்க்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளரிகுண்ட் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களுக்குக் குறைந்தது 10 குடும்பங்கள் மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு மாவட்டமான பத்தனம்திட்டாவில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மலையாளப்புழாவில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.
தென்னாலாவில் (மலப்புரம் மாவட்டம்) 21 செ.மீ. மிக அதிக மழைப் பதிவாகியுள்ளது. கோழிக்கோட்டில் உள்ள வடகராவில் 18 செ.மீ. மழையும், காசர்கோடு மற்றும் கண்ணூரில் பல இடங்களில் 16 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இடுக்கியில் மணிக்கு 80 கி.மீ. வேகத்திலும், கோட்டயம் மற்றும் வயநாட்டில் மணிக்கு 61 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை மற்றும் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.
கனமழையால் மாநிலம் முழுவதும் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.