புணே: ஆற்றுப்பாலம் இடிந்ததற்கு மக்களின் அலட்சியமே காரணம்! -பாஜக அமைச்சர்

இந்த பாலத்தை பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது
புணே ஆற்றுப்பாலம் இடிந்த இடம்
புணே ஆற்றுப்பாலம் இடிந்த இடம்PTI
Published on
Updated on
2 min read

புணே: புணே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய இரும்புப்பாலம் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 15) இடிந்து விழுந்ததில் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றில் விழுந்தனர்.

இந்த கோர விபத்தில் ஒரு குழந்தை உள்பட மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புணேயிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலுள்ள குந்த் மலை சுற்றுலா தலத்தின் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.

மகாராஷ்டிர பொதுப்பணித் துறையால் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இரும்புப்பாலத்தின் பாராமரிப்பு பணிகளை புணே மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வந்துள்ளது. பாலம் பழுதடைந்திருந்ததால், அதனருகே புதிய பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக ரூ. 8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஆற்றின் மறுகரையிலுள்ள முக்கிய சாலைக்கு செல்ல குறுகலான இந்த பழைய பாலத்தை இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர். பாதசாரிகளும் இவ்வழியே சென்று வந்தனர்.

இரும்புப்பாலம் சிதிலமடைந்துவிட்டதால் மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சம்பவம் நிகழ்ந்த தருணத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பைக்குகளிலும் ஸ்கூட்டர்களிலும் நடந்தும் அந்த பாலத்தில் சென்று வந்துள்ளனர். ஒரே நேரத்தில் அதிக எடை ஏறியதால் பாரம் தாங்காமல் அந்த பழைய பாலம் இடிந்து விழுந்தது.

மாவட்ட நிர்வாகத்தால் வெறும் எச்சரிக்கைப் பலகை மட்டுமே வைக்கப்படிருந்த நிலையில், தடுப்புகளோ அல்லது யாரும் கடந்து செல்ல முடியாத வகையில் கயிறுகளோ கட்டி வழி மறிக்கப்படவில்லை. இதனால் சகஜமாக மக்கள் நடமாட்டம் இந்த பாலத்தில் இருந்து வந்துள்ளது. முறையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்றுப்பாதையில் செல்ல மக்களை அறிவுறுத்தியிருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று உள்ளூர் மகக்ளும் சமூக செயல்பாட்டாளர்களும் சொல்கின்றனர்.

இந்த நிலையில், பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு அரசின் அலட்சியமே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இந்த விபத்து மகாராஷ்டிரத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு களங்கத்தை விளைவித்துள்ளது.

புணே ஆற்றுப்பாலத்தில் வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புச் சுவர்
புணே ஆற்றுப்பாலத்தில் வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புச் சுவர்ANI

பாலம் இடிந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக சொல்லப்பட்டாலும் மக்கள் துருப்பிடித்த பாலத்தை பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம் என்றும் இன்னொரு பக்கம் சொல்லப்படுகிறது.

இது குறித்து மகாராஷ்டிர பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கிரிஷ் மஹாஜன் கூறியிருப்பதாவது: “பாலத்தின் பாரம் தாங்கும் திறனையும் மீறி, அதாவது சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அந்த பாலத்தின் வழியே விபத்து நிகழ்ந்த தருணத்தில் சென்றுள்ளனர். இதனாலேயே அந்த பாலம் இடிந்து விழுந்தது.

விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்த பாலத்தை பயன்படுத்தினர். முறையான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்ததையும் பொருட்படுத்தாமல் மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தினர்” என்றார்.

சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படையினரின் தேடுதல், மீட்பு பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், மாநில காவல் துறையால் உள்ளூர் மக்களின் உதவியுடன் ஆற்றில் எவரேனும் விழுந்துள்ளனரா? என்பதை உறுதிப்படுத்த மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com