இரு என்ஜின்களும் நல்ல முறையில்தான் இருந்தன; விமானிகளும் திறமையானவர்கள்! ஏர் இந்தியா தலைவர்

விமான விபத்து குறித்து ஏர் இந்தியா தலைவர் பேட்டி...
air india
ஏா் இந்தியா தலைவர் என்.சந்திரசேகரன்
Published on
Updated on
1 min read

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின்கள் நல்ல முறையில் இருந்ததாகவும், இரண்டு விமானிகளும் திறமையானவர்கள் என்றும் ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 270 பேர் பலியாகினர்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி நேர்க்காணலுக்கு அளித்த பேட்டியில், விமானத்தின் நிலை, விமானிகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏர் இந்தியா நிறுவனத் தலைவர் சந்திரசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

“விபத்து தொடர்பாக நிறைய ஊகங்கள் எழுகின்றன. இந்த விமானம் குறித்து சொல்லவேண்டுமென்றால், ஏஐ 171 சுத்தமான வரலாற்றைக் கொண்டது. இதுவரை சிவப்பு சிக்னல் எழுப்பியதில்லை. வலதுபுற என்ஜின் மார்ச் மாதம் புதியதாக மாற்றப்பட்டது. இடதுபுற என்ஜின் கடைசியாக 2023 இல் சர்வீஸ் செய்யப்பட்டது. வருகின்ற டிசம்பர் மாதம் ஆய்வு செய்யப்பட இருந்தது. இரண்டும் சுத்தமான வரலாற்றை கொண்ட என்ஜின்கள்.

இரண்டு விமானிகளும் திறமையானவர்கள். கேப்டன் சபர்வால் 11,500 மணிநேரமும், துணை விமானி கிளைவ் 3,400 மணிநேர விமான அனுபவமும் கொண்டவர்கள். சக ஊழியர்களிடமிருந்து நான் கேள்விப்படுவது என்னவென்றால், அவர்கள் சிறந்த விமானிகள் மற்றும் சிறந்த நிபுணர்கள். எனவே, எந்த முடிவையும் எடுக்க முடியாது. கருப்புப் பெட்டி மற்றும் குரல் பதிவுகள் நிச்சயமாக உண்மையைச் சொல்லும். அதற்காக நாம் காத்திருக்க வேண்டும்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் சொல்வது கடினமான ஒன்று. அவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் துணை நிற்பேன். பணத்தை கடந்து, அவர்களுக்கு எப்போது எந்த வகையில் வேண்டுமானாலும் உதவி செய்வேன்.

தாயின் அஸ்தியைக் கரைக்க வந்த தந்தையை உயிரிழந்து லண்டனில் உள்ள 4 மற்றும் 8 வயது குழந்தைகளை காக்க அறக்கட்டளை மூலம் ஏற்பாடுகள் செய்யப்படும். அவர்களுக்கு தேவையான உதவிகளை அறிந்து செய்வோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுவது குறித்து பேசிய அவர்,

“நாளொன்றுக்கு 1,100-க்கும் அதிகமான விமானங்களை இயக்குகின்றோம். பொதுவாகவே, நாள்தோறும் சூழலுக்கு ஏற்ப 5 முதல் 16 விமானங்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்று.

மேலும், கடந்த 6 நாள்களாக விமானப் போக்குவரத்து துறை அறிவுறுத்தல்படி, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக போயிங் 787 சேவைகள் நிறுத்தப்பட்டன. அதேபோல், ஈரான் - இஸ்ரேல் மோதலால் வான்வெளி மூடப்பட்டதன் காரணமாக பல சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com