Kedarnath flood
கேதர்நாத் வெள்ளம் கோப்புப்படம்

கேதர்நாத் பெருவெள்ளம்: 12 ஆண்டுகள் ஆகியும் 702 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை!

கேதர்நாத் பெருவெள்ளத்தில் அடையாளம் காணப்படாமல் உள்ள சடலங்கள் பற்றி...
Published on

கேதர்நாத் பெருவெள்ளம் ஏற்பட்டு 12 ஆண்டுகளாகியும் 702 பேரின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

உத்தரகண்ட் மாநிலம், கேதர்நாத்தில் கடந்த 2013 ஜூன் 15 இரவு ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தில் லட்சக்கணக்கான மக்கள் சிக்கிய நிலையில், 90,000 பேரை ராணுவமும், 30,000 பேரை காவல்துறையும் மீட்டது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த வெள்ளத்தில் சுமார் 4,400 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

கேதர்நாத் சுற்றுப் பகுதியில் வசித்த உள்ளூர்வாசிகள் மட்டும் 991 பேர் பலியாகினர்.

இந்த பேரிடர் பகுதியில் மீட்புப் படையினர் நடத்திய தேடுதல் பணியின்போது 55 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும், 735 சடலங்கள், உடல் பாகங்கள் மற்றும் மனித எலும்புகள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட 735 உடல்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பெங்களூரில் உள்ள சிறப்பு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

மேலும், பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களில் உறவினர்கள் 6,000-க்கும் மேற்பட்டோர் தங்களின் மாதிரிகளை டிஎன்ஏ பரிசோதனைக்காக அளித்தனர்.

ஆனால், 735 உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் உறவினர்கள் அளித்த வெறும் 33 மாதிரிகள் மட்டுமே பொருந்தின. 12 ஆண்டுகள் ஆகியும் உயிரிழந்த 702 பேர் யாரென கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது.

இதுதொடர்பாக, கேதர்நாத் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ”702 பேரின் டிஎன்ஏ அறிக்கைகள் எங்களிடம் உள்ளன, ஆனால் உறவினர்களின் மாதிரிகளுடன் பொருந்தவில்லை, அடையாளம் காணமுடியாதது மனவேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பேரிடர் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், உறவினர்களின் நிலை அறியாமல் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com