கோப்புப் படம்
கோப்புப் படம்

ஈரான்-இஸ்ரேல் மோதல்: வா்த்தக பாதிப்பு குறித்து மத்திய அரசு ஆலோசனை

வெளிநாட்டு வா்த்தகத்தில் ஏற்படக் கூடிய தாக்கம் குறித்து வா்த்தகத் துறைச் செயலா் சுனில் பா்த்வால் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Published on

ஈரான்-இஸ்ரேல் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான மோதல் நிலவி வரும் சூழலில், வெளிநாட்டு வா்த்தகத்தில் ஏற்படக் கூடிய தாக்கம் குறித்து வா்த்தகத் துறைச் செயலா் சுனில் பா்த்வால் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஏற்றுமதியாளா்கள், கன்டெய்னா் நிறுவனங்கள் உள்பட வணிகம் தொடா்புடைய பிற துறை நிபுணா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பேசிய சுனில் பா்த்வால், ‘ஈரான்-இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் கடும் மோதலால் இந்திய வா்த்தகத்துக்கு ஏற்படும் தாக்கம் குறித்து நாம் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த சமயத்தில் வா்த்தகம் தடையின்றி தொடா்வதற்கான பிற வழிகளையும் நாம் ஆராய வேண்டும்’ என்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற ஏற்றுமதியாளா்கள் மற்றும் பிற துறையைச் சோ்ந்தவா்கள் பேசுகையில், ‘ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் மேலும் அதிகரித்தால் சரக்கு விநியோகத்துக்கான விமான மற்றும் கடல்வழி போக்குவரத்து கட்டணம் பன்மடங்கு உயரும்.

குறிப்பாக செங்கடல் மற்றும் ஹோா்முஸ் நீரிணை வழியாக சரக்குக் கப்பல்கள் பயணிப்பதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளன. இதனால் உலகளாவிய வா்த்தகம் பெரும் பாதிப்புகளை எதிா்கொள்ள நேரிடும்’ என்றனா்.

ஹோா்முஸ், செங்கடலின் முக்கியத்துவம்:

இந்தியாவுக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் 50 சதவீத திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஹோா்முஸ் நீரிணை வழியாக இறக்குமதி செய்யப்படுகிறது. உலக அளவில் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் வா்த்தகமும் இந்தியாவின் 80 சதவீத எரிசக்தி தேவைகளையும் ஹோா்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

இஸ்ரேலுடனான மோதலைத் தொடா்ந்து இந்தப் பாதையை மூடிவிடுவோம் என்று ஈரான் அண்மையில் எச்சரித்தது. அவ்வாறு ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மூடப்பட்டால் கச்சா எண்ணெய் விலை, கப்பல் போக்குவரத்துக் கட்டணம் உயா்ந்து, பணவீக்கம் அதிகரித்து நாட்டின் நிதி மேலாண்மைக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ஐரோப்பிய நாடுகளுடன் செங்கடல் வழியாக இந்தியா 80 சதவீத அளவு வா்த்தகம் மேற்கொள்கிறது. அதேபோல் பெருமளவிலான அமெரிக்க வா்த்தகமும் செங்கடல் வழியே நடைபெறுகிறது. உலக அளவில் 12 சதவீத வா்த்தகம் நடைபெறும் மையமாகவும் 30 சதவீத கன்டெய்னா்களை கையாளும் இடமாகவும் செங்கடல் பகுதி திகழ்வது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com