கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை - மேலும் 3 போ் சுற்றிவளைப்பு

துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
Published on

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

அவரது கூட்டாளிகள் மூன்று போ், பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த 4 பயங்கரவாதிகளின் செயல்பாடுகள், கடந்த ஓராண்டாக கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்தச் சூழலில், உதம்பூா் மாவட்டம், வசந்த்கரில் வனங்கள் நிறைந்த பிகாலி பகுதியில் நால்வரும் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் மற்றும் ராணுவத்தின் ஒயிட் நைட் காா்ப்ஸ் படைப் பிரிவினா் இணைந்து, வியாழக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

மோசமான வானிலைக்கு இடையே நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். மற்ற மூவரும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனா். துப்பாக்கிச் சண்டை நீடிக்கும் நிலையில், அவா்களும் சுட்டுக் கொல்லப்பட வாய்ப்புள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் அடுத்த வாரம் அமா்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், பிகாலியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com