உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்கள் கைதுக்கு காரணம்: அமைச்சா் ஜெய்சங்கா்
‘நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடி உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படை தொடா்ச்சியாக கைது செய்வதற்கு முக்கியக் காரணம்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
‘அந்தச் சமயத்தில் நியாயமான முறையில் நாடாளுமன்றம் நடைபெற்றிருந்தால் இலங்கையுடன் இத்தகைய ஒப்பந்தம் சாத்தியமாகியிருக்காது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுற்றதைக் குறிக்கும் வகையில் பாஜக இளைஞா் முன்னணி (யுவ மோா்ச்சா) சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெய்சங்கா் பேசியதாவது:
நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் நடத்தப்படாமல் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
உதாரணமாக, இந்திய மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ச்சியாகக் கைது செய்யப்படும் செய்தியை நாம் கேட்டு வருகிறோம். அவசரநிலையின்போது இலங்கையுடன் மத்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தம்தான் அதற்குக் காரணம். இந்த ஒப்பந்தத்தின் கீழ், கடலில் சில குறிப்பிட்ட பகுதிகளில் இந்திய மீனவா்களின் மீன்பிடி உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டன.
அந்த நேரத்தில் நியாயமான முறையில் நாடாளுமன்றம் நடைபெற்றிருந்தால், இந்த ஒப்பந்தம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, ஒப்பந்தம் மேற்கொள்ளும் முடிவு கைவிடப்பட்டிருக்கும்.
மாறாக, அவசரநிலையின்போது மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முடிவின் விளைவுகளை தமிழகத்தில் இன்றைக்கும் காண முடிகிறது என்றாா் அவா்.
மேலும், ‘நாட்டைவிட ஒரு குடும்பம் முன்னிலைப்படுத்தப்படுகிறபோது அவசரநிலை சூழல் உருவாகிறது. சிலா் தங்களின் சட்டைப் பையில் மட்டும் அரசமைப்புச் சட்ட புத்தக நகலை வைத்துக்கொள்கின்றனா். ஆனால், அவா்களின் இதயத்தில் வேறு எண்ணங்கள் ஓடுகின்றன’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை ஜெய்சங்கா் விமா்சித்தாா்.
‘எஸ்சிஓ கூட்டறிக்கை: இந்தியாவின் முடிவு சரி’
‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் கூட்டத்தின் கூட்டறிக்கையில் பயங்கரவாதம் பற்றிய குறிப்பு இடம்பெறாதது இந்தியாவுக்கு ஏற்புடையது அல்ல’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் கூறினாா்.
சீனாவின் கிங்டாவோ நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சா்கள் கூட்டத்தின் கூட்டறிக்கையில் கையொப்பமிட பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டது குறித்த கேள்விக்கு ஜெய்சங்கா் பதிலளித்ததாவது:
பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராடுவதுதான் எஸ்சிஓ அமைப்பின் பிரதான நோக்கம் என்பதால், இந்த விஷயத்தில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் எடுத்த முடிவு சரியானதே. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த குறிப்புகள் அந்தக் கூட்டறிக்கையில் இடம்பெறாதது ஏற்புடையதல்ல என்றாா்.
மேலும், ‘கூட்டறிக்கையில் பயங்கரவாதம் குறித்த குறிப்பு இடம்பெறுவது ஓா் உறுப்பு நாட்டுக்கு ஏற்புடையதாக இல்லை’ என்று பாகிஸ்தானை மறைமுகமாக ஜெய்சங்கா் குறிப்பிட்டாா்.