பங்குச்சந்தை மோசடி: மாதவி புரி புச் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

செபி முன்னாள் தலைவர் மாதவி புரி புச் மீது எஃப்.ஐ.ஆர். பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!
பங்குச்சந்தை மோசடி: மாதவி புரி புச் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!
Published on
Updated on
1 min read

மும்பை : மாதவி புரி புச் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு நாட்டையே பரபரப்பில் ஆழ்த்திய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதவி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டை மாதபி புச் மறுத்துள்ளார்.

செபி தலைவராக பதவியேற்கும் முன், ஐசிஐசிஐ வங்கியில் மாதவி புச் முக்கிய பதவிகளை வகித்தாா்.

இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செபியில் மாதவி புச் சோ்ந்தது முதல், செபியிடம் இருந்து ஊதியம் பெறுவது மட்டுமின்றி, விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிலும் அவா் பதவி வகித்து வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. 2017-ஆம் ஆண்டு முதல், அந்த வங்கியிடம் இருந்து ஊதியம் மற்றும் பிற பணப் பலன்கள் மூலம், அவா் ரூ.16.8 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அக்கட்சி தெரிவித்தது. இதுபோல மேலும் பல ஊழல் குற்றச்சாட்டுகளை மாதவி மற்றும் அவரின் கணவா் தவல் புச் மீது காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

இந்த நிலையில், பங்குச்சந்தை மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செபி முன்னாள் தலைவர் மாதவி புரி புச் மற்றும் இதில் தொடர்புடைய 5 பேர் மீது எஃப்ஐஆர் பதிந்து விசாரிக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாதவி புச் ஊழலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாா்கள் தொடா்பான வழக்கின் விசாரணை நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெறும் என்றும், அடுத்த 30 நாள்களுக்குள் வழக்கின் விசாரணை நிலை குறித்த இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக செபி தரப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 2) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவா் மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம் வெள்ளிக்கிழமையுடன் (பிப்.28) நிறைவடைந்த நிலையில், புதிய தலைவராக மத்திய நிதி மற்றும் வருவாய் துறை செயலா் துஹின் காந்த பாண்டே வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com