
காணாமல் போன மனிதர்கள், சடலங்களை கண்டறிவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மோப்ப நாய்கள் தெலங்கானா சுரங்க விபத்து பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன.
தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் கடந்த பிப். 22-ஆம் தேதி நடைபெற்றன. அப்போது சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். அவர்களை மீட்கும் பணியில் 13-வது நாளாக நடைபெற்று வருகின்றன.
சுரங்கத்துக்குள் சேறு, தண்ணீா், இடிபாடுகள் சூழ்ந்திருப்பதால் அவா்களை மீட்பதில் சிக்கல் தொடர்ந்து வருகின்றது. தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம், கடற்படை என பல்வேறு துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், காணாமல் போனவர்கள், மனித உடல்கள், மனித உடல் பாகங்களை கண்டறிவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற கேரளத்தின் இரண்டு கடாவர் மோப்ப நாய்களின் உதவியை பேரிடர் மீட்புப் படையினர் நாடியுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கேரள அரசிடம் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, தெலங்கானா மாநிலத்துக்கு இரண்டு கடாவர் நாய்கள் கேரள அரசு அனுப்பியுள்ளது.