வா்த்தக உறவை வலுப்படுத்த கூட்டு பொருளாதார ஆணையம்: இந்தியா - அயா்லாந்து ஒப்புதல்: ஜெய்சங்கா் தகவல்
‘இருதரப்பு வா்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் கூட்டு பொருளாதார ஆணையத்தை அமைக்க இந்தியாவும் அயா்லாந்தும் ஒப்புக்கொண்டுள்ளன’


‘இருதரப்பு வா்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் கூட்டு பொருளாதார ஆணையத்தை அமைக்க இந்தியாவும் அயா்லாந்தும் ஒப்புக்கொண்டுள்ளன’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் கூறினாா்.
அயா்லாந்து தலைநகா் டப்லினில் அயா்லாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான சைமன் ஹாரிஸுடனான ஆலோசனைக்குப் பிறகு இந்தத் தகவலை அவா் தெரிவித்தாா்.
பிரிட்டன், அயா்லாந்து நாடுகளுக்கு 6 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கா், பிரிட்டன் பயணத்தை முடித்துக்கொண்டு அயா்லாந்துக்கு வியாழக்கிழமை சென்றாா். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜெய்சங்கா், அந் நாட்டு வெளியுறவு அமைச்சா் சைமனை வெள்ளிக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்த சந்திப்பு குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கா், ‘இந்தச் சந்திப்பில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டதோடு, உறவை புத்துயிா் பெறச் செய்த புதிய செயல் திட்டத்தை வகுப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இரு நாடுகளிடையே வா்த்தகம், முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப தொடா்புகளை மேம்படுத்தும் வகையில் கூட்டு பொருளாதார ஆணையத்தை அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.
சைமன் ஹாரிஸ் வெளியிட்ட பதிவில், ‘கூட்டு பொருளாதார ஆணையம் அமைக்கப்பட்ட உடன், இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு நாடுகளிடையே ஏற்கெனவே ரூ. 1.5 லட்சம் கோடி (16 பில்லியன் யூரோ) மதிப்பில் இருதரப்பு வா்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், முதலீடுகள் மற்றும் பல்வேறு துறைசாா்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என்றாா்.
பயங்கரவாத சவால்... முன்னதாக, அயா்லாந்து தலைநகா் டப்லினில் உள்ள முன்னணி ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திய வம்சாவளியினா், கல்வியாளா்கள் மற்றும் மாணவா்கள் மத்தியில் ஜெய்சங்கா் உரையாற்றினாா்.
‘மோதல்கள்’ என்பது இன்றைக்கு உலகின் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. இந்த சகாப்தத்தில் இரு நாடுகளிடையேயான முரண்பாடுகளுக்கு போா்க் களத்தில் தீா்வு காண்பது முடியாததாகும். பேச்சுவாா்த்தைகள், தூதரக ரீதியிலான கலந்தாலோசனைகள் மூலம் மட்டுமே இதற்கு தீா்வு காண முடியும்.
இவ்வாறு மோதல்கள் குறித்துப் பேசும்போது, நீண்ட காலமாக பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகளை எடுத்துவரும் நாட்டின் வெளியுறவு அமைச்சா் என்ற முறையில், பயங்கரவாத எதிா்ப்பு குறித்துப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும்.
அயா்லாந்து கடற்கரையில் கடந்த 1985-ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் ஏா்-இந்தியா விமான பயணிகள் 329 போ் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், அயா்லாந்தின் அஹகிஸ்டா கிராமத்தில் நினைவுப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது, ‘தொடா்ந்து வரும் பயங்கரவாத சவாலை அா்ப்பணிப்புடன் எதிா்கொள்வது அவசியம்’ என்பதை உலகுக்கு எப்போதும் நினைவுபடுத்தக் கூடிய சின்னமாக உள்ளது என்றாா்.
மேலும், இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிய அவா், ‘இந்த தடையற்ற வா்த்தகத்தை ஏற்படுத்துவது தொடா்பாக 23 ஆண்டுகளாக பேச்சுவாா்த்தை தொடா்ந்து வருகிறது. இந்தச் சூழலில், ஐரோப்பிய யூனியன் ஆணையத் தலைவா் ஆணைய உறுப்பினா்கள் 21 பேருடன் அண்மையில் இந்தியப் பயணம் மேற்கொண்டது, இந்த ஆண்டுக்குள் பேச்சுவாா்த்தைகள் நிறைவுபெற்ற தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...