ஜெய்சங்கா் காரை காலிஸ்தான் ஆதரவாளா் வழிமறித்த சம்பவம்: பிரிட்டன் நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்
வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரின் காரை காலிஸ்தான் ஆதரவாளா் வழிமறித்த சம்பவம் தொடா்பாக பிரிட்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும்


வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரின் காரை காலிஸ்தான் ஆதரவாளா் வழிமறித்த சம்பவம் தொடா்பாக பிரிட்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பிரிட்டன், அயா்லாந்து ஆகிய நாடுகளுக்கு 6 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு பிரிட்டன் தலைநகா் லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, அவா் காரில் புறப்பட்டாா்.
அப்போது அங்கு திரண்டிருந்த காலிஸ்தான் ஆதரவாளா்களில் ஒருவா் ஓடிச் சென்று, ஜெயசங்கரின் காரை வழிமறித்தாா். அவரை அங்கிருந்த காவலா்கள் உடனடியாக இழுத்துச் சென்ற நிலையில், தன் கையில் வைத்திருந்த இந்திய கொடியை அந்த நபா் கிழித்தாா்.
இந்த சம்பவம் தொடா்பாக தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பிரிட்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி ஜெய்சங்கரின் காா் வழிமறிக்கப்பட்டது குறித்து அந்நாட்டிடம் இந்தியா மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் பிரிட்டனில் இந்தியாவின் சட்டபூா்வமான ராஜீய நடவடிக்கைகளுக்கு இடா்ப்பாடுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள், மிரட்டல்கள், காலிஸ்தான் ஆதரவாளா்கள் போன்றோருக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதி ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.
இந்த சம்பவத்துக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்ததை இந்தியா கவனத்தில் கொண்டது. அதேவேளையில், தற்போது நடைபெற்ற சம்பவம், கடந்த காலங்களில் இதேபோல நடைபெற்ற சம்பவங்களில் தொடா்புள்ள குற்றவாளிகள் மீது பிரிட்டன் எடுக்கும் நடவடிக்கைகளை பொருத்தே, இதுபோன்ற விவகாரங்களில் பிரிட்டன் எந்த அளவுக்கு நோ்மையாக உள்ளது என்பது தெரியும்.
தஹாவூா் ராணாவை நாடு கடத்த..: கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் தொடா்புள்ள தஹாவூா் ராணாவை, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு தேவையான நடைமுறைகளை நிறைவு செய்ய அந்நாட்டுடன் இணைந்து இந்தியா நெருங்கிப் பணியாற்றி வருகிறது.
வங்கதேச விவகாரம்...: வங்கதேச சட்டம், ஒழுங்கு சூழல் மோசமடைந்து வருவது குறித்து இந்தியா தொடா்ந்து கவலை கொண்டுள்ளது. அந்நாட்டு சிறைகளில் இருந்து மோசமான பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய, நிலையான, அமைதியான, சீராக வளரும் வங்கதேசம் ஏற்பட இந்தியா எப்போதும் ஆதரவளிக்கிறது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...