ஹோலி: வர்ணங்களை விரும்பாதவர்கள் வெளியே வர வேண்டாம் - உ.பி. காவல் அதிகாரியால் சர்ச்சை

பொதுவாக ஹோலியில் பூசப்படும் வர்ணங்களை முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோலி: வர்ணங்களை விரும்பாதவர்கள் வெளியே வர வேண்டாம் - உ.பி. காவல் அதிகாரியால் சர்ச்சை
Published on
Updated on
1 min read

ஹோலி பண்டிகையின்போது வர்ணங்களை விரும்பாதவர்கள் வெளியில் வர வேண்டாம் என்று உத்தரப் பிரதேச காவல் அதிகாரி கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஹோலி பண்டிகையையொட்டி உத்தரப் பிரதேசம் மாநிலம் சம்பல் வட்ட அதிகாரி அனுஜ் சௌத்ரி பேசியதாவது, ``ஹோலி பண்டிகை என்பது வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே வரும்; ஆனால், வெள்ளிக்கிழமை தொழுகை என்பது வருடத்துக்கு 52 முறை வரும். ஹோலியின் வர்ணங்களை விரும்பாதவர்கள், அன்றைய நாளில் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வருவதாயிருந்தால், பரந்த மனம் கொண்டவராய் இருக்க வேண்டும்.

வர்ணங்களை விரும்பாதவர்கள் மீது வலுக்கட்டாயமாகப் பூசுதலும் கூடாது. ஹோலி பண்டிகையில் ஹிந்துக்கள் வர்ணங்களைப் பூசியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுகின்றனர். ஈத் பண்டிகையின்போது, சிறப்பு உணவுகளைத் தயாரித்து, பிறருக்கும் வழங்கி கொண்டாடுகின்றனர். இரு பண்டிகைகளின் கருத்துருவும் ஒன்றே. ஆகையால், இரு சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதனிடையே, வர்ணத்தை விரும்பாத முஸ்லிம்கள், ஹோலி பண்டிகையின்போது வெளியே வர வேண்டாம் என்று காவல் அதிகாரி அனுஜ் கூறியது சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஹோலி பண்டிகையில் ஹிந்துக்களுடன் முஸ்லிம்களும் சிலர் சேர்ந்து கொண்டாடும்போது, பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நிகழ்வதுடன், ஹிந்து பண்டிகைகளைச் சீர்குலைக்க முஸ்லிம்கள் முயல்வதாகவும் மதுரா பாஜக எம்​எல்ஏ ராஜேஷ் சௌத்ரி கூறியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஹோலி பண்டிகை, வட மாநிலங்களில் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஒருவர் மீது ஒருவர் வர்ணங்களைப் பூசியும், கட்டியணைத்தும் அன்பினை வெளிப்படுத்தும் விதத்தில் ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவர்.

ஒரு வாரத்துக்கு கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை, இந்தாண்டில் மார்ச் 14 ஆம் தேதியில் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களும் தொழுகை நடத்துவர். அதுமட்டுமின்றி, ஹோலி பண்டிகையில் பூசப்படும் வர்ணங்களை முஸ்லிம்கள் விரும்பாததால், அன்றைய நாளில் தொழுகையை ஒத்தி வைக்குமாறு உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து அமைப்பினர் கூறுவதும் சர்ச்சைக்கு அடிக்கோலிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com