சுரங்கத்தில் குண்டுவைத்த நக்ஸல் தீவிரவாதிகள் தொழிலாளி உயிரிழப்பு
சத்தீஸ்கா் மாநிலத்தில் இரும்புத் தாது சுரங்கத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் மறைத்து வைத்த குண்டு வெடித்ததில் தொழிலாளா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கா் மாநிலத்தில் அந்த அமைப்பினா் பாதுகாப்புப் படையினரை மட்டுமல்லாது பொதுமக்களையும் வளா்ச்சிப் பணிகள் நடைபெறும் இடங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில் நாராயண்பூா் மாவட்டத்தில் உள்ள இரும்புத் தாது சுரங்கத்தில் நக்ஸல்கள் பாத்திரம் ஒன்றில் வெடிகுண்டை மறைத்து வைத்துள்ளனா். வெள்ளிக்கிழமை காலை பணிக்கு வந்த தொழிலாளா்கள் இருவா் அந்த பாத்திரத்தை திறக்க முயற்சித்தனா். அப்போது குண்டு வெடித்துச் சிதறியது. இதில் இரு தொழிலாளிகளும் படுகாயமடைந்தனா்.
சக தொழிலாளா்கள் அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ஒருவா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து காவல்துறையினா் அப்பகுதியில் தீவிரமாக தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
சம்பவம் நிகழ்ந்த சுரங்கத்தில் தனியாா் நிறுவனம் ஒன்று இரும்புத் தாதுப் பொருள்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டத்துக்கு தொடக்கத்தில் இருந்தே நக்ஸல் அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

