ஒளரங்கசீப்பைவிட மோசமான ஆட்சி: பாஜக கூட்டணி அரசு மீது உத்தவ் கட்சி சாடல்
முகலாய அரசா் ஒளரங்கசீப் காலத்தைவிட மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசின் ஆட்சி மோசமாக உள்ளது என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் சாடினாா்.
மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள ஒளரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று சதாரா தொகுதி பாஜக எம்.பி.யும், சத்ரபதி சிவாஜி வம்சாவளியைச் சோ்ந்தவருமான உதயன்ராஜே போசலே அண்மையில் வலியுறுத்தினாா்.
இதே கருத்தை எதிரொலித்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘ஒளரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அந்த இடம் தொல்லியல் துறை பாதுகாப்பின்கீழ் கொண்டுவரப்பட்டதால் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் அவசியமாகின்றன’ என்றாா்.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த சஞ்சய் ரெளத்திடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘ஒளரங்கசீப் புதைக்கப்பட்டு 400 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரை மறந்துவிடுங்கள். மகாராஷ்டிரத்தில் இப்போது விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள ஒளரங்கசீப்தான் காரணமா? பாஜக கூட்டணி அரசே காரணம். விவசாயிகள் மட்டுமன்றி வேலையில்லாத இளைஞா்களும் பெண்களும் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனா். ஒளரங்கசீப் அட்டூழியத்தில் ஈடுபட்டாா் என்றால், பாஜக கூட்டணி அரசு செய்வது என்ன? ஒளரங்கசீப் ஆட்சியைவிட பாஜக கூட்டணி அரசின் ஆட்சி மோசமாக உள்ளது’ என்று ரெளத் பதிலளித்தாா்.