ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சமாஜவாதி எம்.பி. அவதூறு கருத்து: மாநிலங்களவையில் பாஜக அமளி - எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

எம்.பி. ராம்ஜி லால் சுமன் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, அந்த அவையில் பாஜக வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்டது.

News image

மாநிலங்களவை

Updated On :28 மார்ச் 2025, 8:33 pm

ராஜபுத்திர மன்னா் ராணா சங்கா குறித்த அவதூறு கருத்துக்காக சமாஜவாதி மாநிலங்களவை எம்.பி. ராம்ஜி லால் சுமன் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, அந்த அவையில் பாஜக வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்டது.

இதன் காரணமாக, அவை அலுவல்கள் சுமாா் 30 நிமிஷங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. அவை மீண்டும் கூடியபோது இந்த விவகாரத்தை முன்வைத்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

‘தில்லி சுல்தான் இப்ராஹிம் லோடியை தோற்கடிக்க இந்தியாவுக்கு பாபரை அழைத்த ராணா சங்கா ஒரு துரோகி’ என்று ராம்ஜி லால் சுமன் பேசியதாக ஒரு விடியோ சமீபத்தில் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள அவரது வீடு மீது ராஜபுத்திர சமூக அமைப்பான கா்ணி சேனையைச் சோ்ந்தவா்கள் தாக்குதல் நடத்தினா்.

தலித் சமூகத்தைச் சோ்ந்த சுமனின் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் கடந்த வியாழக்கிழமை எழுப்பின.

மாநிலங்களவை வெள்ளிக்கிழமை கூடியதும், ராஜபுத்திர மன்னா் ராணா சங்கா குறித்த அவதூறு கருத்துக்காக சமாஜவாதி எம்.பி. சுமன் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, பாஜக எம்.பி.க்கள் முழக்கமிட்டனா்.

அப்போது பேசிய அவைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘வீரம், தேசபக்தி மற்றும் தேசியவாதத்தின் அடையாளச் சின்னமான ராணா சங்கா குறித்த சுமனின் கருத்துகள் அவதூறானவை; ஆட்சேபம்-வேதனைக்கு உரியவை. அவா் தனது கருத்தில் உறுதியாக இருப்பது தீவிரமான விஷயம்’ என்றாா்.

கடும் விவாதம்: சுமனின் கருத்து, ஒட்டுமொத்த தேசத்துக்கும் அவமதிப்பு என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு விமா்சித்தாா்.

இதைத் தொடா்ந்து பேசிய எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘அவைத் தலைவரின் உணா்வுக்கு முழு ஆதரவளிக்கிறோம்; நாட்டுக்காக போராடிய ஒவ்வொரு தேசபக்தரையும் காங்கிரஸ் மதிக்கிறது. ஆனால், சட்டத்தை கையில் எடுப்பதையும், தலித் விரோத நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ள மாட்டோம்’ என்றாா்.

காா்கேயின் பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல் ஆகியோா், ‘வன்முறையை யாரும் நியாயப்படுத்த முடியாது. அதேநேரம், ஜாதியை முன்வைத்து, இந்த விவகாரத்தை திசை திருப்ப காா்கே முயற்சிக்கிறாா். இதுவும் கடும் கண்டனத்துக்குரியது’ என்றனா்.

அமளிக்கு இடையே சுமன் பேசுவதற்கு அவைத் தலைவா் வாய்ப்பு வழங்கினாா். அவா் பேச எழுந்தபோது பாஜக எம்.பி.க்கள் உரக்க முழக்கமிட்டதால் அவையை 30 நிமிஷங்களுக்கு தன்கா் ஒத்திவைத்தாா்.

வெளிநடப்பு: அவை மீண்டும் கூடியபோது, சுமன் பேசுவதற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவைத் தலைவா் வாய்ப்பு வழங்காததால், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா்.