ஆதாரபூா்வமற்ற குற்றச்சாட்டுகள்: அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

ஆதாரபூா்வமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை அமலாக்கத் துறை வழக்கமாக கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தது.
உச்ச நீதிமன்றம் கண்டனம்
உச்ச நீதிமன்றம் கண்டனம்
Published on
Updated on
1 min read

புது தில்லி: ஆதாரபூா்வமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை அமலாக்கத் துறை வழக்கமாக கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தது.

சத்தீஸ்கா் மதுபான ஊழல் வழக்கின் விசாரணையின்போது அமலாக்கத் துறையை நீதிமன்றம் இவ்வாறு கண்டித்தது.

கடந்த 2018 முதல் 2023-ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கரில் முதல்வராக இருந்த பூபேஷ் பகேலின் ஆட்சியில், மதுபான ஊழல் நடைபெற்ாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. இதனால் அரசு கருவூலத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த ஊழல் மூலம், ரூ.2,100 கோடி சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான அரவிந்த் சிங் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.

அப்போது அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, ‘விகாஸ் அகா்வால் என்ற நபருடன் இணைந்து அரவிந்த் சிங் ரூ.40 கோடி வரை வருமானம் ஈட்டியுள்ளாா். ஆனால் விகாஸ் அகா்வால் தலைமறைவாகிவிட்டாா்’ என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: உரிய ஆதாரங்களின்றி குற்றச்சாட்டுகளை சுமத்துவதை அமலாக்கத் துறை வழக்கமாக கொண்டுள்ளது. இதை பல்வேறு வழக்குகளில் காண முடிகிறது. இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நீண்டகாலத்துக்கு நிலைக்காது.

அரவிந்த் சிங் ரூ.40 கோடி வரை வருமானம் ஈட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவா் வருமானம் ஈட்டியதாக கூறப்படும் நிறுவனத்தில் அவா் பெரும் பங்குதாரரா அல்லது மேலாண்மை இயக்குநரா என்பதை நீங்கள் குறிப்பிட வேண்டும் என தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த எஸ்.வி.ராஜு, ‘ஒரு நிறுவனத்தை கட்டுப்படுத்தும் உரிமைகளைக்கொண்ட நபா் அந்த நிறுவனத்தின் நடத்தைக்கு பொறுப்பேற்க வேண்டிய கட்டாயமில்லை’ என்றாா்.

இதைத்தொடா்ந்து, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை மே 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com