
சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய வங்கதேசத் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
துர்க் மாவட்டத்தின் சிறப்பு அதிரடி படை காவல் துறையினர், அங்கு சட்டவிரோதமாக குடியேறி வசித்து வரும் வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா அகதிகளை அடையாளம் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் பிலாய் பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பு வாசிகளிடம் நேற்று (மே 16) சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு வசித்த முஹமது ரசெல் ஷேயிக் மற்றும் அவரது மனைவியான ஜோதி ரசெல் ஷேயிக் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், தாங்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த 2009-2017 வரையில் தாங்கள் மும்பையில் வசித்ததாகவும், பின்னர் அங்கிருந்து துர்க் மாவட்டத்துக்கு குடிபெயர்ந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், அவர்கள் இருவரும் தங்களுக்கான போலி ஆதார் அட்டைகளையும் காவல் துறையினரிடம் காண்பித்துள்ளனர். பின்னர், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவரும் வங்கதேசத்தின் ஜெஸ்ஸோர் மாவட்டத்தைச் சேர்ந்த முஹமது ரசெல் ஷேயிக் (வயது 36) மற்றும் அவரது மனைவி ஷாஹிதா காத்தூன் (35) எனத் தெரியவந்துள்ளது.
முன்னதாக, கடந்த 2009-ம் ஆண்டு முதல்முறையாக சட்டவிரோதமாக காத்தூன் இந்தியாவுக்கு வந்து ஒரு சமையல் கூடத்தில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு, அவர் ஷேயிக்கை சந்தித்தாகவும், கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் வங்கதேசத்துக்குச் சென்று திருமணம் செய்துக்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.
பின்னர், கடவுச்சீட்டு மற்றும் சட்டப்பூர்வ விசாவுடன் இந்தியா வந்த அவர்கள் இருவரும் போலியான ஆதார் மற்றும் பான் அட்டைகளை பெற்றுள்ளனர். கடந்த 2020-ல் அவர்களது விசா காலவதியானபோது சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இருவரும் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரின் மீதும் இந்திய கடவுச்சீட்டு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணா மாணவர் கைது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.