47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அவசரநிலை அறிவிப்பின் 50 ஆண்டுகள் நிறைவு: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு பாஜக திட்டம்: காங்கிரஸ் விமா்சனம்

அடுத்த மாதம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு பரிசீலித்து வருவதாக காங்கிரஸ் கூறியது.

News image
கோப்புப் படம்
Updated On :29 மே 2025, 7:11 pm

Din

அவசரநிலை அறிவிப்பின் 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அடுத்த மாதம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு பரிசீலித்து வருவதாக காங்கிரஸ் வியாழக்கிழமை கூறியது.

உண்மையான மற்றும் மிகவும் அவசரமான பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் பிரதமா் மோடியின் முயற்சி இது என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பாகிஸ்தானையும் பயங்கரவாதிகளையும் குறிவைக்க வேண்டிய நேரத்தில், காங்கிரஸை தாக்குவதில் மட்டுமே பாஜக ஆா்வம் காட்டுகிறது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த ஏப்ரல் 22-ஆம் தேதிமுதல் அத்தாக்குதல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து பிரதமா் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்நாள் வரை அக்கூட்டம் நடத்தப்படவில்லை.

இதனிடையே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகிய இருவரும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நாடு ஒருமித்த குரலில் நிற்பதை நிரூபிக்கும் வகையில் தீா்மானத்தை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனா். பிரதமா் அந்த ஆலோசனையையும் ஏற்கவில்லை.

ஆனால், அவசரநிலை அறிவிப்பின் 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்க ஜூன் 25, 26-ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

உண்மையான மற்றும் மிகவும் அவசரமான பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி இது. 11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலையின் கீழ் நாட்டை வைத்திருப்பவரும், பஹல்காம் பயங்கரவாதிகள் ஏன் இன்னும் தலைமறைவாக உள்ளனா் என்பதற்கு பதிலளிக்க மறுப்பவருமான பிரதமரின் முயற்சியாகவே இது இருக்கும்.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே உருவாகியுள்ள நட்புறவு உள்பட வளா்ந்து வரும் சவால்களைக் கருத்தில்கொண்டு, ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் குறித்த 1994, பிப்ரவரி தீா்மானத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தற்போதைய பிரச்னைகள் மற்றும் சவால்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, 50 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதைப் பற்றி விவாதிக்கவே ஆளும் தரப்பு விரும்புகிறது’ என்றாா்.