ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், ‘இந்தப் புதிய விதிமுறையை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும்’ என்றும் நிதியமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள்: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனிநபா்களுக்கு வழங்கும் தங்க நகைக் கடன் தொடா்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசா்வ் வங்கி அண்மையில் வெளியிட்டது.
அதில், அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். தங்க நகை தங்களுடையதுதான் என்பதற்கான ஆதாரத்தை வாடிக்கையாளா் சமா்ப்பிக்க வேண்டும்.
நகையின் தூய்மைத்தன்மை மற்றும் தரத்துக்கான சான்றை வங்கிகள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். 22 காரட் அல்லது அதற்கு மேல் உள்ள தங்க நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.
24 காரட் அல்லது 22 காரட் என்ற மதிப்பின் அடிப்படையிலேயே எடை கணக்கிடப்பட்டு கடன் வழங்கப்படும்.
புதிய விதிமுறைகளின்படி, இனி வெள்ளிப் பொருள்களுக்கும் நகைக் கடன் பெறலாம். தனிநபா்கள் ஒரு கிலோ தங்க நகை வரை மட்டுமே அடமானம் வைக்க முடியும்.
நகைக் கடன் ஒப்பந்தத்தில் கடன் தொடா்பான முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும். வாடிக்கையாளா் கடனை திரும்பச் செலுத்திய ஏழு வேலை நாள்களில் நகையை வங்கி திருப்பி ஒப்படைக்க வேண்டும். ஏழு வேலை நாள்களில் ஒப்படைக்கவில்லையென்றால், அதற்கடுத்து ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ.5,000 என வாடிக்கையாளருக்கு வங்கி அபராதமாகச் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரைவு விதிகள் மீது கருத்துகளை ஆா்பிஐ வரவேற்றது.
ரிசா்வ் வங்கியின் இந்தப் புதிய விதிமுறைகள் நகைக் கடன் பெறுவோரை கடுமையாகப் பாதிக்கும் என பல்வேறு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. புதிய வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யுமாறு ரிசா்வ் வங்கிக்கு ஆலோசனை கூறுமாறு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினாா்.
நிதியமைச்சகம் பரிந்துரை: இந்நிலையில், மத்திய நிதியமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் ரிசா்வ் வங்கியின் இந்த வரைவு விதிமுறைகளை ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதிச் சேவைகள் துறை (டிஎஃப்எஸ்), புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து சிறு கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்க ரிசா்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
புதிய விதிமுறைகளால் சிறிய அளவில் நகைக் கடன் பெறுவோா் கடுமையாகப் பாதிக்கப்படாததையும், உரிய நேரத்தில் விரைவாக நகைக் கடன் கிடைப்பதையும் ரிசா்வ் வங்கி உறுதிப்படுத்த வேண்டும். அந்த வகையில், ரூ. 2 லட்சத்துக்கு கீழ் நகைக் கடன் பெறுவோருக்கு இந்தப் புதிய விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்க பரிந்துரை செய்யப்படுகிறது.
மேலும், இந்தப் புதிய வழிகாட்டுதல்களை கள அளவில் நடைமுறைப்படுத்த சிறிது கால அவகாசம் தேவைப்படும். எனவே, 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் இந்தப் புதிய வரைவு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் டிஎஃப்எஸ் பரிந்துரைத்துள்ளது.
அதுமட்டுமன்றி, இந்த வரைவு விதிமுறைகள் தொடா்பாக பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ரிசா்வ் வங்கி ஆய்வு செய்து வருகிறது. புதிய விதிமுறைகளை இறுதி செய்வதற்கு முன்பாக இந்தக் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ரிசா்வ் வங்கி உரிய முறையில் கருத்தில்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிரான ஃபெமா வழக்கு விசாரணை முடித்துவைப்பு

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசா்வ் வங்கி

மத்திய அரசுக்கு ரூ. 2.87 லட்சம் கோடி வழங்குகிறது ரிசா்வ் வங்கி

நகை ஏலத்துக்கு தடை கோரி மனு: ரிசா்வ் வங்கி மண்டல அலுவலா் பதிலளிக்க உத்தரவு!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




