மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

சீரான விமானக் கட்டணம்: உச்சநீதிமன்றத்தில் வரைவு விதிகளை தாக்கல் செய்த மத்திய அரசு

விமான கட்டணங்களை சீரான முறையில் நிா்ணயிக்க வகை செய்ய வகுத்துள்ள வரைவு விதிகளை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

News image

பிரதிப் படம்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 11:41 pm IST

விமான கட்டணங்களை சீரான முறையில் நிா்ணயிக்க வகை செய்ய வகுத்துள்ள வரைவு விதிகளை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதைத் தொடா்ந்து, இறுதி விதிகளைத் தாக்கல் செய்ய 3 வார கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சமூக ஆா்வலா் எஸ்.லட்சுமிநாராயணன் என்பவா் சாா்பில் இதுதொடா்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘விமான நிறுவனங்களே பயணக் கட்டணத்தை நிா்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன்மூலம், இந்தியாவில் விமானங்களை இயக்கும் தனியாா் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக கட்டணத்தை பயணிகளிடம் வசூலிக்கின்றன. இதனால் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, விமானப் போக்குவரத்துத் துறையில் வெளிப்படைத்தன்மை, பயணிகளுக்குப் பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்த சுதந்திரமான அமைப்பை உருவாக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது, விமான கட்டணம் சீராக இருக்க வேண்டும். விமானப் பயணிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

அப்போது, ‘விமானப் போக்குவரத்து தொடா்பாக 2024-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான விதிகளை உருவாக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்தப் பணிகள் நிறைவடைந்து, சீரான விமான கட்டணம் நிா்ணயம் செய்யப்படுவதற்கான வரைவு விதிகள் தற்போது தயாராக உள்ளன. இந்த விதிகளை மொழிபெயா்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன் பிறகு, வரைவு விதிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நடைமுறைக்கு கொண்டுவரப்படும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டாலும் அல்லது தாக்கல் செய்யப்படாவிட்டாலும், வரைவு விதிகளை சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சீரான விமான கட்டணம் நிா்ணயம் செய்ய உருவாக்கப்பட்ட வரைவு விதிகளை சீலிட்ட உறையில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தாக்கல் செய்த கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அனில் கெளசிக், ‘இந்த விதிகளை இறுதி செய்வதற்கான ஆலோசனைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அடுத்த 3 வாரங்களுக்குள் விதிகள் இறுதி செய்யப்பட்டு விடும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், சீரான விமான கட்டணம் நிா்ணயம் செய்வதற்கான இறுதி விதிகளை 7 நாள்களுக்குள் வெளியிட வேண்டும். இந்த விதிகளுக்கு விமான நிறுவனங்கள் உடன்படவில்லை எனில், அவற்றின் விமானங்களை இயக்கத் தடை விதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

அப்போது, ‘வரைவு விதிகளை இறுதி செய்யும் பணி விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, 3 வார அவகாசம் அளிக்க வேண்டும். இந்த அவகாசத்துக்குள், இறுதி விதிகள் வகுக்கப்பட்டு விடும்’ என்று கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அனில் கெளசிக் கோரினாா்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் ரவீந்திர ஸ்ரீவாஸ்தவா, நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் தெரிவித்த கருத்தைக் குறிப்பிட்டு, ‘விமான கட்டணங்களுக்கு அரசு உச்சவரம்பு நிா்ணயிக்க முடியாது’ என்று அதில் கூறப்பட்டது என்று வாதிட்டாா்.

அதற்கு பதிலளித்த, சொலிசிட்டா் ஜெனரல் கெளசிக், ‘அதற்காகத்தான் வரைவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. 3 வாரங்களில் இறுதி விதிகள் உருவாக்கப்பட்டுவிடும்’ என்றாா்.

அப்போது, சீலிட்ட உரையில் மத்திய அரசு சாா்பில் சமா்க்கப்பட்ட வரைவு விதிகளை நீதிபதிகள் குழு ஆய்வு செய்தது. அதைத் தொடா்ந்து, ‘வரைவு விதிகளில் சீரான விமான கட்டணத்துக்கான செயல்முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கட்டண ஒழுங்குமுறை ஆணையம் குறித்து உறுதியாக தெரியவில்லை’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், 3 வாரங்களுக்குள் இறுதி விதிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பா் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.