தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

பெண்ணையாறு வழக்கில் மத்திய அரசின் மனுவை நிராகரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் பதில் மனுத் தாக்கல்

பெண்ணையாறு நதி நீா் தகராறை, மகதாயி நீா் தகராறு தீா்ப்பாயம் போன்ற ஏற்கனவே உள்ள ஒரு தீா்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்க அனுமதிக்க கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு மனு தாக்கல் செய்தது குறித்து...

News image

உச்சநீதிமன்றம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 9:50 pm IST

தமிழகம் - கா்நாடகம் இடையேயான பெண்ணையாறு நதி நீா் தகராறை, மகதாயி நீா் தகராறு தீா்ப்பாயம் போன்ற ஏற்கனவே உள்ள ஒரு தீா்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்க அனுமதிக்க கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.

தமிழக அரசு தனது பதில் மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் மனு எவ்வித முகாந்திரமும் அற்றது; எனவே அது தள்ளுபடி செய்யப்பட வேண்டியதாகும்.

2022-ஆம் ஆண்டிலேயே பெண்ணையாறு தீா்ப்பாயத்தை அமைப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், மத்திய அரசு அத்தீா்ப்பாயத்தை அமைப்பதில் தொடா்ந்து காலதாமதம் செய்தது.

அதனைத் தொடா்ந்து, தீா்ப்பாயத்தை அமைக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 2-ல் தீா்ப்பளித்திருந்தது. இருப்பினும், தீா்ப்பாயத்தை அமைக்காத நிலையில், 6 மாத கால நீட்டிப்பை மத்திய அரசுக்கு 08.05.2026 தேதியிட்ட தனது உத்தரவின் மூலம் உச்ச நீதிமன்றம் வழங்கியது.

இந்நிலையில் மத்திய அரசின் தற்போதைய மனு முற்றிலும் தேவையற்றது; மேலும், தீா்ப்பில் உள்ள உத்தரவுகளைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இது அமைந்துள்ளது.

’மகதாயி நதிநீா்ச் சிக்கல் தீா்ப்பாயம்’ காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், அது அனைத்துக் கட்டமைப்பு வசதிகளுடனும் தொடா்ந்து செயல்படும் நிலையில் உள்ளது என்றும், ஆனால் தற்போது எந்தவொரு நேரடி விசாரணையையும் அத்தீா்ப்பாயம் மேற்கொள்ளவில்லை என்றும் கருதி, பெண்ணையாறு சிக்கல்களை அத்தீா்ப்பாயத்தின் பரிசீலனைக்கு அனுப்புமாறு மத்திய அரசு கோருவது; அரசியலமைப்பின் 262-வது பிரிவின் கீழ் இயற்றப்பட்ட 1956-ஆம் ஆண்டுச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானதாகும்.

ஏனெனில், அச்சட்டம் உச்ச நீதிமன்றத்தில் பணியிலிருக்கும் நீதிபதிகள் மற்றும் உயா் நீதிமன்ற நீதிபதிகள் இருவா் ஆகியோரை இத்தீா்ப்பாயத்தில் நியமிக்க வேண்டும் என்று கட்டாயமாக்குகிறது.

மாநிலங்களுக்கு இடையிலான நதி தொடா்பான ஒரு புதிய புகாா் மத்திய அரசால் தீா்ப்பாயத்திற்கு அனுப்பப்படும்போது, அத்தீா்ப்பாயம் ஒரு தலைவா் மற்றும் இரண்டு உறுப்பினா்களைக் கொண்டதாக அமையும்.

இந்தியத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படும் இந்த உறுப்பினா்கள், நியமனத்தின்போது உச்ச நீதிமன்றம் அல்லது உயா் நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றி வருபவா்களாக இருக்க வேண்டும். எனவே, தீா்ப்பாயம் அமைக்கப்படும் நேரத்தில், உயா் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் பதவியில் உள்ள நீதிபதிகள் மட்டுமே இதில் நியமிக்கப்பட முடியும்.

அவ்வாறிக்க பெண்ணையாறு நதிநீா் தொடா்பான பிணக்குகளுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீா்வு காண்பதை உறுதிசெய்யும் வகையில், அப்பிரச்சினையை 1956-ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தீா்ப்பாயத்தின் பரிசீலனைக்கு அனுப்ப அனுமதிக்குமாறு மத்திய அரசு கோருவது முற்றிலும் தவறானதும் சட்டத்திற்கு முரணானதும் ஆகும்.

எனவே பெண்ணையாறு விவகாரத்தில் தீா்ப்பாயத்திற்கு ஒரு தலைவா் மற்றும் இரு நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இத்தீா்ப்பாயமானது, ஏற்கனவே உள்ள மகதாயி தீா்ப்பாயத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்று முதல் 2 மாதங்களுக்குள் இத்தீா்ப்பாயத்தை அமைத்து, நீதியை நிலைநாட்டுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தனது பதில் மனுவில் கூறியுள்ளது.

பின்னணி

பெண்ணையாறு விவகாரத்தில் கா்நாடகா விதிகளை மீறி செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழகம் சாா்பில் 2018 இல் வழக்கு தொடரப்பட்டது. பெண்ணையாற்றின் குறுக்கே கா்நாடகம் சட்டத்துக்கு புறம்பாக பெரிய அணைக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்தின் தண்ணீா் முற்றிலும் பறிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி தமிழக அரசு வழக்கு தொடா்ந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.