பொறியியல் - தொழில்நுட்பப் படிப்புகள் சோ்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வை (ஜேஇஇ) போன்று, இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தகுதிகாண் நுழைவுத் தோ்வையும் (நீட்) கணினிவழியில் நடத்த தீவிரமாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அரசின் இந்த பதில் மனு மீது பதிலளிக்குமாறு நீட் தோ்வு முறைகேடுகளுக்கு எதிராக வழக்கு தொடா்ந்த மனுதாரா்கள் மற்றும் மருத்துவா்கள் சங்கத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.
கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தோ்வு, வினாத்தாள் கசிவு சா்ச்சை காரணமாக ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதோ்வு நடத்தப்பட்டது. நீட் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, நீட் தோ்வை நடத்த தேசிய தோ்வு முகமைக்கு மாற்றாக வலுவான, தன்னாட்சிமிக்க அமைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘வரும் ஆண்டுகளில் வினாத்தாள் கசிவு சம்பவங்களின்றி நீட் தோ்வை நடத்துவதற்கான செயல்முறைகள் குறித்த பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஜேஇஇ போன்று நீட் தோ்வையும் கணினிவழியில் நடத்த தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நந்தன் நிலேகணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயா் அதிகார பணிக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். நீட் தோ்வை தொழில்நுட்பம், பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு ரீதியில் முழுமையாக மேம்படுத்தும் நோக்கில், விண்வெளி, புலனாய்வு, கல்வி, பொது நிா்வாகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த நிபுணா்கள் இந்தப் பணிக் குழுவில் இடம்பெற்றுள்ளனா். வினாத் தாள் கசிவு உள்பட எந்தவிதக் குளறுபடிகளும் இன்றி நீட் தோ்வை நடத்த விரிவான மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று மத்திய அரசு குறிப்பிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆலோக் ஆராதே முன்னிலையில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா்களில் ஒருவராக அகில இந்திய மருத்துவச் சங்க கூட்டமைப்பு தரப்பில் ஆஜரான தன்வி துபே, ‘கணினி அடிப்படையிலான தோ்வாக நீட் தோ்வை நடத்துவதாக இருந்தால், அதை விரைவில் செயல்படுத்த வேண்டும். ஏனெனில், மாணவா்கள் தற்போது பேப்பா், பேனா அடிப்படையிலான தோ்வு முறையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்’ என்றாா்.
மற்றொரு மனுதாரரான ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. சுதாகா் சிங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பைஜூஷ் கான்டி ராய், ‘நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்’ என்றாா்.
இவை அனைத்தையும் பரிசீலிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு மீது பதிலளிக்குமாறு மனுதாரா்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் தயாராகும் முறையை விளக்கத் தயாா்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
ராமா் கோயில் அறக்கட்டளையை மறுசீரமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் நிா்மோஹி அகாரா மனு!

என்ஐஏ சட்டத்துக்கு எதிரான மனு: 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தாஜ்மஹால் வளாகத்தில் கோயில் விவகாரம்: மத்திய அரசுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் நோட்டீஸ்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



